தஞ்சை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு !


தஞ்சை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு !
x
தினத்தந்தி 24 Jun 2023 10:20 AM IST (Updated: 24 Jun 2023 4:45 PM IST)
t-max-icont-min-icon

நிதி மோசடி புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு

தஞ்சாவூர்

ஹெலிகாப்டர் சகோதரர்கள் :

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் தொழிலதிபர்கள். இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனமும், கும்பகோணத்தை அடுத்த கொற்கை கிராமத்தில் பால் பண்ணையும் வைத்து நடத்தி வந்தனர். மேலும் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைத்து ஹெலிகாப்டர் ஒன்றை வைத்திருப்பதால், `ஹெலிகாப்டர் சகோதரர்கள்' என இந்தப் பகுதி மக்களால் குறிப்பிடப்படுகின்றனர். இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டனர். இதன் மூலம் கும்பகோணம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்கள், வியாபாரிகள், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்தனர்.

இந்த நிதி நிறுவனத்தில் பலரும் கோடிக்கணக்கில் பணம் செலுத்திய நிலையில் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள், தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்களுக்கு முறையாக பணத்தை திருப்பி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே தங்களிடம் 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துபாய் தம்பதி அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஹெலிகாப்டர் சகோதரர்களை தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதன் ஆகியோரை புதுக்கோட்டை வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த போது போலீசார் கைது செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு :

நிதி மோசடி புகாரில் சிக்கிய ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தஞ்சை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி காவல் ஆய்வாளர் கண்ணன் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை, வழக்கு பதிவு செய்து இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்துள்ளது.


Next Story