ஆளும்கட்சியினருக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தியாக மாறி விட்டது - ஐகோர்ட்டு கடும் கண்டனம்


ஆளும்கட்சியினருக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தியாக மாறி விட்டது - ஐகோர்ட்டு கடும் கண்டனம்
x

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமாக செயல்படாமல், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தியாக செயல்படுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2001-2006-ம் ஆண்டுகளில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடிக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீதும் 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மதுரையில் இருந்து சிவகங்கை கோர்ட்டுக்கு மாற்றி, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று போலீசார் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 2012-ம் ஆண்டு அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி கூறியதாவது:-

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில் சிறப்பு கோர்ட்டுகளில் பிறப்பித்த அனைத்து தீர்ப்புகளும் இனி மறு ஆய்வு செய்யப்படும். மாநிலத்தில் எதிர்க்கட்சியினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர். அந்த எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக மாறும்போது, அவர்களை வழக்குகளில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக ஆதாரம் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.

இந்த வழக்கில் 272 சாட்சிகள், 235 ஆவணங்களை சேகரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, மேல் விசாரணை என்ற பெயரில் ஒரு விசாரணையை நடத்தி குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என போலீசார் அறிக்கை கொடுத்துள்ளனர். இந்த அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு பதில் அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த அறிக்கையை அப்போதைய அட்வகேட் ஜெனரல், தலைமை குற்றவியல் வக்கீல் ஆகியோரது ஆலோசனை பெறப்பட்டுள்ளது. கடைசியாக சபாநாயகர் இந்த வழக்கில் ஒரு நீதிபதியை போல செயல்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கொடுத்த அனுமதியை திரும்ப பெற்றுள்ளார்.

இவரது செயல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது மட்டுமல்ல, குற்றவியல் விசாரணையையே கேலிக்கூத்தாக்கி உள்ளது.. புனித மேரி தேவாலயம் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டையில் உள்ள தன் அறையில் உட்கார்ந்துக் கொண்டு அரசியல் சாசனம் இந்த ஐகோர்ட்டுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை சபாநாயகர் குழி தோண்டி புதைத்துள்ளார்.

இதனால், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு இனி குற்றவியல் சட்டம் பொருந்தாது என்று அறிவித்து விடலாம் என்று தோன்றுகிறது. அதேநேரம், அதிகார வரம்பே இல்லாத சிவகங்கை கோர்ட்டுக்கு இந்த வழக்கை மாற்றியதன் மூலம் ஐகோர்ட்டும் தவறு இழைத்திருக்கிறது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளின் விசாரணையில் பிரச்சினை உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமான முறையில் செயல்படாமல், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தியாக செயல்படுகின்றனர்.

இதுபோன்ற தவறுகள் நடைபெற அனுமதித்தால், ஊழல் என்பது புற்றுநோய் போல பரவி இந்த சமுதாயத்தை சிதைத்து விடும். லஞ்ச ஒழிப்பு துறை உருவாக்கப்பட்டதற்கான நோக்கமே அழிந்து விடும்.

மேலும் 2012-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்ய முடியுமா? என்று கேள்வி எழலாம். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு 2002-ம் ஆண்டு அளித்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில், அவ்வாறு மறுஆய்வு செய்ய இந்த ஐகோர்ட்டுக்கு முழு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

பின்னர், இந்த வழக்கிற்கு பதில் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story