அண்ணாகிராமம் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனைகணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல்; ஒன்றியக்குழு தலைவரிடம் விசாரணை
அண்ணாகிராமம் ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.1¼ கோடியில் பணிகள்
கடலூர் அருகே அண்ணாகிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 30 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள கடந்த 14-ந்தேதி நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பணிகளை செய்ய அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன் குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களை மட்டும் ஒதுக்கீடு செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில், அந்த பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமனுக்கு கமிஷன் தொகையை கொடுக்க இருப்பதாகவும், அந்த கமிஷன் தொகையை அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒப்பந்த பணி கிடைக்கப்பெறாத கவுன்சிலர்களுக்கு பிரித்து கொடுக்க இருப்பதாகவும் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.3 லட்சம் பறிமுதல்
அதன்படி கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் 1 மணி அளவில் அண்ணா கிராமம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒன்றியக்குழு தலைவர் அறைக்குள் திடீரென புகுந்து சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்தை ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணை
தொடர்ந்து கணக்கில் வராத இந்த பணம் குறித்து ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் அண்ணாகிராமம் ஒன்றியத்தில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 9 ஆயிரம் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.