ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
லஞ்ச ஓழிப்பு போலீசார் சோதனை
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள காணியாளம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். இந்தநிலையில் நேற்று காலை கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான ேபாலீசார் காணியாளம்பட்டியில் உள்ள சுரேஷ் வீட்டிற்கு வந்தனர். பின்னர் சுரேசின் வீட்டு கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய ேசாதனை மாலை 4.45 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து சுரேஷ் வீட்டில் இருந்து ஏராளமான நோட்டுகள், கணினி பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து காரில் எடுத்துச் சென்றனர்.
தொடர்பில் இருந்துள்ளார்
இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மூக்கையா என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் மாவட்ட நகரமைப்பு மற்றும் ஊரக திட்ட இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்போது, அவர் ரியல் எஸ்டேட் அதிபர் சுரேசுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர ஊரமைப்பு உதவி இயக்குனராக மூக்கையா பணியாற்றி வருகிறார். மூக்கையா மீது பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி சுரேசின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது, என்றனர்.