மாணவர்களிடையே போதை பழக்கம் ஏற்படுவதை தடுக்க 120 கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு குழு
மாணவர்களிடையே போதை பழக்கம் ஏற்படுவதை தடுக்க 120 கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
கோவை
மாணவர்களிடையே போதை பழக்கம் ஏற்படுவதை தடுக்க 120 கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
கல்லூரிகளில் விழிப்புணர்வு
கோவை மாநகர மற்றும் புறநகர பகுதியில் கஞ்சா, கஞ்சா சாக்லேட் போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக அமைக்கப்பட்டு உள்ள தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையே, பெரும்பாலான கல்லூரிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் இருப்பதால், அவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு கல்லூரிகளிலும் சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை புறநகர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கத்தை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:-
போதை பொருள் தடுப்பு குழு
கோவை புறநகர் பகுதியில் கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள் பழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக புறநகர் பகுதியில் உள்ள 120 கல்லூரிகளிலும் போதை பொருட்கள் தடுப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த குழு மூலம் 1½ லட்சம் மாணவர்களுக்கு போதைபொருட்கள் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதற்காக 60-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கடும் நடவடிக்கை
மேலும் போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் யார்? அவற்றை சப்ளை செய்யும் நபர்கள் யார்? என்பது குறித்து கேட்டறிந்துவிட்டு, கல்லூரி மாணவர்களுக்கு இதுபோன்ற பொருட்களை சப்ளை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதுபோன்று கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருவதால், அவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் கடந்த ஆண்டில் கஞ்சா விற்றதாக 680 பேர் கைது செய்யப்பட்டு, 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.