போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு கண்காட்சி - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
சென்னை வால்டாக்ஸ் சாலையில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற தலைப்பில் பிரசார இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போலீசார் தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பூக்கடை போலீஸ் எல்லையில் 17 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு சுவரொட்டி தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.
இதில் தேர்வு செய்யப்பட்ட 204 சுவரொட்டிகளை கொண்டு சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கண்காட்சி நடைபெற்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ஆல்பர்ட்ஜான் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். சிறந்த சுவரொட்டிகளை தயாரித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.