கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை - குவாரி உரிமையாளர் கைது


கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை - குவாரி உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2022 1:54 PM GMT (Updated: 12 Sep 2022 4:10 AM GMT)

கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் தென்னிலை அருகே உள்ள செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல்குவாரிக்கு அருகாமையில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் அமைந்துள்ளது.

செல்வகுமார் நிலப் பிரச்சனை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் கடந்த 2019-ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் செல்வகுமாரின் கல்குவாரி உரிமம் முடிந்து இயங்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் இணைந்து ஜெகநாதன் கனிம வளத்துறைக்கு பல்வேறு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மூன்று தினங்களுக்கு முன்பாக செல்வகுமாருக்கு சொந்தமான கல்குவாரி சட்ட விரோதமாக இயங்கியதால் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் க.பரமத்தி அருகே காருடையாம்பாளையம் என்ற இடத்தில் இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெகநாதன் மீது தனியார் கல்குவாரிக்கு சொந்தமான சரக்குவேன் மோதியது. இதில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோதிய வேன் செல்வகுமாருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த நிலையில் க.பரமத்தி காவல் நிலைய போலீசார் ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரியை மூடுவதற்கு காரணமான ஜெகநாதனை லாரி ஏற்றி கொன்று விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார், லாரி டிரைவர் சக்திவேல் ஆகியோர் மீது க.பரமத்தி காவல் நிலையப் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story