ராகிங் தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்
ராகிங் தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாமில் வேலூர் மாவட்ட நீதிபதிகள் பங்கேற்றனர்.
வேலூரை அடுத்த அரப்பாக்கம் அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராகிங் தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி நிறுவனரும் தலைவருமான எஸ்.ராமதாஸ், கல்லூரி செயலாளரும், பொருளாளருமான ஜி.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மாவட்ட முதன்மை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சங்கர், வேலூர் கூடுதல் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி வி.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ராகிங் செய்வதால் மாணவர்களுக்கு மனரீதியாக ஏற்படும் பாதிப்புகள், அதன் விளைவுகள் மற்றும் அவற்றுக்கு சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள். பின்னர் கல்லூரி மாணவர்கள் ராகிங் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரைந்திருந்த வரைபடங்கள் மற்றும் கோலங்களை நீதிபதிகள் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர். தொடர்ந்து வக்கீல் எல்.ஆரோக்கியதாஸ் ராகிங்தடுப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.
இதில் கல்லூரி இயக்குனர்கள் ஆர்.பிரசாந்த், டி.கிஷோர், ஆர்.டி.கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்வி இயக்குனர் பேராசிரியர் ஜி.வேதகிரி, முதல்வர் டி.கே.கோபிநாதன், துணை முதல்வர் டி.சரவணன், நிர்வாக அதிகாரி எஸ்.சாண்டில்யன் மற்றும் துறைத்தலைவர்கள், அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.