விளை நிலங்களை மதுபாராக மாற்றி வரும் சமூக விரோதிகள்


விளை நிலங்களை மதுபாராக மாற்றி வரும் சமூக விரோதிகள்
x
தினத்தந்தி 29 Sep 2023 6:45 PM GMT (Updated: 29 Sep 2023 6:46 PM GMT)

பெண்ணாடம் அருகே விளை நிலங்களை மதுபாராக மாற்றி வரும் சமூக விரோதிகள் மதுபாட்டில்களை உடைத்து நிலத்தில் வீசி எறிவதால் தொழிலாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கடலூர்

பெண்ணாடம்

உழவன் சேற்றில் கால் பதித்தால்தான், மனிதன் சோற்றில் கை வைக்க முடியும் என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது உழவன் நிலத்தை உழவு செய்து பயிர் விளைவித்து அறுவடை செய்தால்தான் நமக்கு உண்பதற்கு உணவு கிடைக்கும் என்பதே இதன் பொருள். தற்போதைய சூழ்நிலையில் விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. இருக்கிற கொஞ்ச, நஞ்ச நிலங்களிலும் புயல், மழையால் பயிா்கள் சேதம், நோய், பூச்சி தாக்குல் மற்றும் காட்டு விலங்களால் பயிர்கள் சேதம், விளைத்த பயிர்களுக்கு போதிய விலை கிடைக்காதது என இப்படி பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கிவிட்டால் எங்கே புயல், மழையால் பயிர் சேதம் அடைந்து விடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே இருந்து வருகிறது. கடன்வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பல ஆயிரம் செலவு செய்து விளைவித்த பயிரை அறுவடை செய்து பின்னர் அதை விற்று பணம் கைக்கு வந்த பிறகுதான் நிம்மதி.

இந்த சூழ்நிலையில் சில மர்ம நபர்கள் விளைநிலங்களுக்குள்ளேயும், கரையோரமாகவும் அமர்ந்து மது அருந்தி மாலை நேர மதுபாராக மாற்றி வருவது வேதனையாக உள்ளது. ஆம், இதற்கு உதாரணமாக பெண்ணாடம் பகுதியை கூறலாம். பெண்ணாடம் அருகே உள்ள சின்னகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் எழில்வேந்தன்(வயது 41). பட்டதாரியான இவர் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இவரது விளை நிலத்தில் சமூக விரோதிகள் மது அருந்தி வருகின்றனர். அது மட்டுமின்றி மது அருந்திவிட்டு காலி கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பைகளை அங்கேயே போட்டுவிட்டும், சிலர் காலி மது பாட்டில்களை உடைத்து வயல்களில் வீசியும் செல்கின்றனர்.

இதனால் நிலத்தில் களை எடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் விவசாய கூலி தொழிலாளர்களின் கால்களை உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகள் பதம் பார்த்து விடுகின்றன. மேலும் பிளாஸ்டிக் கப்புகள், பைகள் விவசாய நிலத்தில் விழுவதால் மண் வளம் கெட்டுப்போய் பயிர்கள் சேதம் அடையும் அபாய நிலையம் உருவாகி வருகிறது.

ஒருநாள் எழில்வேந்தன் அவரது நிலத்தை பார்வையிட வந்தபோது அங்கே சில மர்ம நபர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். உடனே அவர் அவர்களை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அங்கிருந்த நீர் மூழ்கி மோட்டாரின் பாகங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் இது குறித்து எழில்வேந்தன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் ஒரு உதாரணம் தான். இது போன்று பல்வேறு விவசாய நிலங்களிலும் மர்ம நபர்கள் மது அருந்துவது, சூதாடுவது, பயிர்களைசேதப்படுத்துவது, திருடுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, விளை நிலங்கள் சமூக விரோதிகளுக்கு விளையாட்டு திடலாகவும், மதுபாராகவும் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது கோவில். உணவு தரும் நிலத்தை தெய்வமாக கருதிதான் பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே பயிர் சாகுபடி செய்து வருகிறோம். பயிர் அறுவடை செய்து விற்று பணம் கைக்கு வந்த பின்னர்தான் கடன் வாங்கியவர்களுக்கு கடனை திருப்பி செலுத்த முடியும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் புயல், வெள்ளம் வந்து பயிர்கள் எங்கே சேதம் அடைந்து விடுமோ என்ற அச்ச உணர்வு இருக்கும். இ்ந்த மாதிரியான சூழ்நிலையில் விளை நிலங்களில் அமா்ந்து மது அருந்துவது, காலி மதுபாட்டில்களை உடைத்து நிலத்தில் வீசுவது போன்ற செயல்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. உடைந்த மதுபாட்டில் துண்டுகள் தொழிலாளிகளின் கால்களை கிழித்து காயம் ஏற்படுவதால் வீண் செலவு ஏற்படுவதோடு, மறுமுறை தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வர மறுக்கிறார்கள். இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே விளை நிலங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story