இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Nov 2025 8:10 PM IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் 91.74 சதவீதம் எஸ்.ஐ.ஆர். விண்ணப்ப படிவங்கள் வழங்கல்: கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக குறள் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து திரும்ப பெறுவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்கு பதிவு அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான அழகுமீனா காணொலி காட்சி வாயிலாக கலந்தாய்வு மேற்கொண்டபோது கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 4.11.2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 872 வாக்காளர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்புப் படிவத்தினை வழங்கி வருகிறார்கள்.
- 13 Nov 2025 8:06 PM IST
டெல்லி கார் வெடிப்பு: சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக தண்டனை நிறைவேற்றப்படும் - அமித்ஷா
“டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி உறுதியேற்றுள்ளார். அது நிச்சயமாக நிறைவேற்றப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையின் மூலம், இந்தியாவில் இனி இதுபோன்ற செயல்களை செய்வதற்கு யாரும் நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். இதனை நிறைவேற்றுவதில் மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் உறுதியாக உள்ளது.”
- 13 Nov 2025 8:03 PM IST
16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 13 Nov 2025 7:42 PM IST
அரியானா: அல்-பலா பல்கலைக்கழகத்தில் பதிவெண் இன்றி நிற்கும் மர்ம கார்; விசாரணைக்கு பறந்த போலீசார்
அரியானாவின் பரீதாபாத் நகரில் தவுஜ் பகுதியில் அல்-பலா பல்கலைக்கழகம் உள்ளது. இதில் பிரெஸ்ஸா நிறுவன கார் ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தகவல் அரியானா போலீசுக்கு சென்றது.
இதனை தொடர்ந்து, அரியானா போலீசின் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் அடங்கிய வாகனம் ஒன்று விசாரணைக்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது. இதுதொடர்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 13 Nov 2025 7:41 PM IST
வங்கக்கடலில் 21-ந்தேதி புதிய காற்றழுத்தம் உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
- 13 Nov 2025 7:34 PM IST
டெல்லி கார் வெடிப்பு; சுங்க சாவடியில் உமர் கட்டணம் செலுத்தும் சி.சி.டி.வி. பதிவு வெளியீடு
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டாக்டர் உமர் உன் நபி டெல்லிக்குள் நுழையும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன. உமர் கட்டணம் செலுத்தும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளன. அவர் பதர்பூர் எல்லை வழியே ஐ20 காரில் வருகிறார்.
சுங்க சாவடியில் காரை நிறுத்தி, பணம் எடுத்து, சுங்க சாவடி ஊழியரிடம் கொடுக்கிறார். அவர் முக கவசம் அணிந்தபடி உள்ளார். வீடியோவில் உமரின் முகம் தெளிவாக தெரிகிறது. அவருடைய அடையாளம் உறுதியாகி உள்ளது. காரின் பின் சீட்டில் பெரிய பை ஒன்றும் உள்ளது.
- 13 Nov 2025 7:30 PM IST
கர்நாடகாவில் பரபரப்பு; 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கொளுத்திய கரும்பு விவசாயிகள்
கர்நாடகாவில் அதிகரித்து வரும் விலைவாசியை முன்னிட்டு, கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த கோரி கரும்பு விவசாயிகள் கடந்த சில நாட்களாக போ ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக முதலில் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய தலைவர்களுடன் முதல்-மந்திரி சித்தராமையா அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தினார். இதுபற்றி பிரதமர் மோடிக்கும் கடிதம் ஒன்றை எழுதினார்.
இந்நிலையில், இந்த விசயத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெலகாவியில் வி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கற்களை வீசி எறிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சமீபத்தில், கர்நாடக சர்க்கரை துறை மந்திரி சிவானந்த் பாட்டீல் பாதுகாப்பு வாகனம் மீது பெலகாவியில் காலணி ஒன்றும் வீசப்பட்டது.
- 13 Nov 2025 6:57 PM IST
கார் வெடிப்பு எதிரொலி; ரெயில், விமான பயணிகளுக்கு டெல்லி காவல் இணை ஆணையாளர் அறிவுறுத்தல்
டெல்லி போலீசின் காவல் இணை ஆணையாளர் மிலிந்த் தும்பிரே கூறும்போது, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இதனையொட்டி, ரெயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அனைத்து பயணிகளும் முன்கூட்டியே வரவும்.
ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில் புறப்படுவதற்கு குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு முன்பு வரவும். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில் புறப்படுவதற்கு குறைந்தது 20 நிமிடங்களுக்கு முன்பு வரவும். சர்வதேச விமானங்கள் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன்பாக பயணிகள் வரவும்.
பாதுகாப்பு சோதனைகளை எளிமையாக மேற்கொள்வது உறுதி செய்யப்படவும், கடைசி நேர அசவுகரியம் ஏற்படாமல் தவிர்க்கவும் மற்றும் சரியான நேரத்தில் பயணம் செய்வதற்கும் ஏதுவாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
- 13 Nov 2025 6:32 PM IST
மேகதாது அணை விவகாரம்: சட்டப் போராட்டத்தில் பின்னடைவாக கருத இயலாது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கர்நாடக அரசு கடந்த 15 ஆண்டுகளாக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் 67.16 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்படும்போது, காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் அளவு வெகுவாக குறையும், அதன் காரணமாக காவிரி பாசனப் பகுதிகளும், தமிழ்நாட்டின் பெரும்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு பெரும் நெருக்கடி ஏற்படும் என்பதால், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் சட்டப் போராட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
- 13 Nov 2025 6:22 PM IST
‘ஹால்டிக்கெட்' எடுப்பதில் தேர்வர்கள் சிரமம்; ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு
பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. செப்டம்பர் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஆசிரியர் தகுதித்தேர்வு 15.11.2025 (TNTET Paper-I) மற்றும் தாள் II 16.11.2025 (TNTET Paper-II) ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படுத்திய Application ID மற்றும் Password ஒரு சில விண்ணப்பதாரர்கள் மறந்த நிலையில் இணையதளத்தில் சரியான முறையில் நுழைவுச் சீட்டு (Hall Ticket) பதிவிறக்க செய்ய முடியாததாலும் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது. தேர்வர்கள் https://trb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.















