ஏ.டி.எம்.மையங்களில் திருட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: போலீஸ் அதிகாரி அறிவுறுத்தல்


ஏ.டி.எம்.மையங்களில் திருட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: போலீஸ் அதிகாரி அறிவுறுத்தல்
x

கரூர் மாநகரில் ஏ.டி.எம்.மையங்களில் திருட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வங்கிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.

கரூர்

ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணத்தை பாதுகாப்பது பற்றி மண்டல வங்கி அலுவலர்கள் மற்றும் வங்கி மேலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தில் 272 ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளது. வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் 4 புறமும் கண்காணிக்கும்படி முறையாக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், முகத்தை அடையாளம் காண உதவும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அடங்கிய உயர்தர கேமராக்கள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் பொருத்த வேண்டும்,

கேமராக்கள் பொருத்த வேண்டும்

ஏ.டி.எம். மையங்களில் திருட்டை தடுக்கும் வகையில் எச்சரிக்கை மணி அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒலிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும், இரவு நேரங்களில் முகம் தெளிவாக தெரியும்படி ஏ.டி.எம். மையங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும், கேமரா பதிவுகள் 30 நாட்களுக்கு இருக்கும் படியும் 4 திசைகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும்.

அந்த கேமராக்கள் கைகளுக்கு எளிதில் எட்டாத வகையில் பொருத்தப்பட வேண்டும், கிராம பகுதியில் ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு ஒரு பாதுகாப்பு அலுவலர், நகரப் பகுதிகளில் 2 அல்லது 3 ஏ.டி.எம். மையங்களில் ஒரு பாதுகாப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story