தமிழர்களின் பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-தொல்நடை குழு கோரிக்கை
தமிழர்களின் பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொல்நடை குழு கோரிக்கை விடுத்துள்ளது/
சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் காளிராசா, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ந் தேதி உலக மரபு நாளாக கொண்டாட யுனஸ்கோ அமைப்பு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 18-ந் தேதி உலக மரபு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் தன்னிடத்தே தனித்தன்மையுடைய மரபை, பாரம்பரியத்தை பெற்றுள்ளன. அவற்றை பாதுகாக்க இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது.
சிவகங்கை மாவட்டம் பொதுவாக தொல்லியல் சின்னங்களாலும், கீழடி தொகுப்பு அகழாய்வுகளாலும் தொல்லியல் கருவூலமாகவும் விளங்குகிறது. குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, மகிபாலன்பட்டி, பிரான்மலை போன்ற இடங்களில் குடைவரை கோவில்கள் காணப்படுகின்றன. மலைப்பகுதியின் இடையில் குடைவரை கோவிலை அடுத்து அமைந்துள்ள கட்டுமான கோவிலில் முதலாம் மாறவர்மன், குலசேகர பாண்டியன் போன்றவர்களின் 32 கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக தமிழக அரசால் இரண்டு இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை அரண்மனை சிறுவயல் மருது பாண்டியர் கோட்டையும், திருமலை தமிழி எழுத்தும் ஆகும். இதன் சிறப்பை பொதுமக்கள், இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் இதை பாதுகாக்க முடியும். இவ்வாறு கூறியுள்ளார்.