மீண்டும் அதிமுகவில் இணைகிறார் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா..!


மீண்டும் அதிமுகவில் இணைகிறார் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா..!
x
தினத்தந்தி 4 Aug 2023 9:41 AM IST (Updated: 4 Aug 2023 10:53 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைகிறார் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா.

சென்னை,

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாள் முதலே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா. அவருக்கு, 1986-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில்தான் முதன்முறையாக வாய்ப்பளித்தார் எம்ஜிஆர். அதிமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த தேர்தல் அதுதான். திமுக ஆதரவு அலை வீசிய அந்த உள்ளாட்சித் தேர்தலில், மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் அன்வர் ராஜா.

பின்னர், மதுரையில் நடந்த எம்ஜிஆர் மன்ற மாநாட்டில் அன்வர் ராஜாவை அழைத்துப் பேசவைத்த எம்ஜிஆர், அதிமுகவின் அதிகாரம் வாய்ந்த குழுக்களுள் ஒன்றான 15 பேர் கொண்ட ஆட்சிமன்றக் குழுவில் அன்வர் ராஜாவையும் சேர்த்துக்கொண்டார். அவர்களில் 13 பேர் அமைச்சர்கள். அமைச்சர்கள் அல்லாத இருவர், அன்வர் ராஜாவும் ஜெயலலிதாவும் மட்டுமே.

எம்ஜிஆரின் மறைவுப் பிறகு அதிமுக உடைந்தபோது ஜானகி எம்ஜிஆரின் பக்கம் நின்ற அன்வர் ராஜா, 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஜானகி அணி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பிறகு, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அதிமுகவில் சேர்ந்துகொண்டார். அந்த நாள் தொடங்கி, வென்றாலும் தோற்றாலும் அதிமுகவே என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் அன்வர் ராஜா. அதிமுகவில் இருக்கும் சிறுபான்மைச் சமூகத்து மக்களின் பிரதிநிதியாக இருந்த அன்வர் ராஜாவுக்கு, 2001 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாநில அமைச்சர் பதவி கிடைத்தது. தொழிலாளர் நலத் துறை அமைச்சராகச் செயல்பட்டார். திடீரென அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா, பிறகு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் பக்கம் நின்றார். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எனும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பேசிவந்த அன்வர் ராஜாவுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனாலும் அதிமுகவிலேயே தொடர்ச்சியாக நீடித்துவந்த அன்வர் ராஜா, திடீரென அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவைப்படுகிறது என்றார். சசிகலாவுக்கு ஆதரவான வார்த்தைகளையும் வெளிப்படுத்தினார்.

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் கடந்த 2021-ல் அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டார். இந்தநிலையில்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று மீண்டும் இணைகிறார் முன்னாள் எம்.பி.,அன்வர் ராஜா. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைகிறார்.


Next Story