ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குடமுழுக்கு


துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

கும்பகோணம் அருகே உள்ள துக்காச்சியில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலின் உப கோவிலான சவுந்திரநாயகி அம்மன் சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.

ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்தகோவில் பல ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் பாழடைந்து சிதிலமடைந்து காணப்பட்டது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு உபயதாரர்கள் மூலம் ரூ.4 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றது.

குடமுழுக்கு

திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 1-ந்தேதி மாலை முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று முன்தினம் 2-ம் மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது.

நேற்று காலை 5.30 மணி அளவில ்4-ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. காலை 9 மணி அளவில் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி 10 மணிக்கு கோவில் விமான கோபுர கலசம் மற்றும் மூலவர் கோபுர கலசம் ஆகியவற்றில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

திருக்கல்யாணம்

மாலை 6 மணிக்கு மகாபிஷேகமும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், வீதிஉலா காட்சியும் நடந்தது. குடமுழுக்கு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் கலைச்செல்வி ராஜேந்திரன், துக்காச்சி தி.மு.க. ஊராட்சி செயலாளர் செ.ராமச்சந்திரன், விநாயகா மோட்டார்ஸ் செல்வகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே.முரளி, ஊராட்சி செயலாளர் கே. ரகு, இந்திரா அறக்கட்டளை சி.அருண், டாஸ்மாக் மேற்பார்வையாளர் துக்காச்சி சவு. சுரேஷ், அரிமா சங்க முன்னாள் தலைவர் எஸ். மாதவன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

விழாவையொட்டி பக்தர்களுக்கு பல இடங்களில் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் துக்காச்சி ஜமாத்தார்கள் சார்பில் நீர்மோர், ரோஸ் மில்க் போன்ற பானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) தா. உமாதேவி, தக்கார் சு.சாந்தா மற்றும் பணியாளர்கள், துக்காச்சி கிராம மக்கள் செய்து இருந்தனர்.


Next Story