மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பயிர் மருந்தியல் துறை பேராசிரியர் விமலா விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பயிர் மருந்தியல் துறை பேராசிரியர் விமலா விளக்கம் அளித்துள்ளார்.
படைப்புழு தாக்குதல்
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
மக்காச்சோளத்தில் அமெரிக்க படைப்புழு தாக்குதலினால் தாய் அந்துப்பூச்சி 100-200 முட்டைகள் கொண்ட குவியல்களை பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடுகிறது. முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி சேதத்தை உண்டு பண்ணுகிறது.
இதனால் இலைகள் பச்சையம் இழந்து வெண்மையாக காணப்படும். இளம் புழுக்கள் நூலிழைகளை உருவாக்கும். இதன் மூலம் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு செல்லும். இளம் செடிகளில் இலை உறைகளையும் முதிர்ந்த செடியில் கதிரின் நூல் இழைகளையும் அதிகம் சேதப்படுத்தும்.
கூட்டுப்புழு
புழுக்கள் இலை உறைக்குள் சென்று பாதிப்பை உண்டாக்கும். இதனால் இலைகள் விரிவடையும் போது அதில் வரிசையாக துளைகள் தென்படும். இளம் செடிகளில் நுனிக்குருத்து சேதமடைவதால் பக்க இலைகள் மற்றும் கதிர்கள் தோன்றும்.
இந்த புழுக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த ஆழமாக உழவு செய்ய வேண்டும். இதன்மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். அதிக அளவு தழை சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்.
இனக்கவர்ச்சி பொறி
பயிர் சுழற்சி முறைகள் கையாளுதல், வரப்பு பயிராக தட்டைப் பயறு, எள், துவரை, சூரியகாந்தி ஆகியவற்ைற பயிரிட வேண்டும். அதிக அளவில் ஆண் பூச்சிகளை கவர ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகளை விதைத்த ஒரு வாரத்திற்குள் வைக்க வேண்டும்.
விதைத்த 15 முதல் 20 நாட்களில் அசாடிராக்டின் 1,500 பி.பி.எம். 5 மி.லி அல்லது புளுபெண்டையமைடு 480 எஸ்.சி. 5 மி 10 லிட்டர் தண்ணீரில் தெளிக்க வேண்டும். கரைசல் இலைகளில் நன்கு படிய சாண்டோவிட், பைட்டோவெட், ஸ்டிக்கால் அக்ரோவெட் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றினை 1 லிட்டர் தண்ணீருக்கு ¼மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.