கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்கஅரசின் மானியத்தொகை அதிகரிப்புதர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்கஅரசின் மானியத்தொகை அதிகரிப்புதர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 2 Aug 2023 1:00 AM IST (Updated: 2 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் மானியத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மானியத்தொகை உயர்வு

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சொந்த கட்டிடங்களில் செயல்படும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகளை மேற்கொள்ளவும் கட்டிடத்தின் வயதிற்கு ஏற்ப மானியத்தொகையை உயர்த்தியும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதன்படி தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதியை அமைத்தல், குடிநீர் வசதி உருவாக்குதல் ஆகிய பணிகளை கூடுதலாக மேற்கொள்ளலாம். தேவாலய கட்டிடங்களின் வயதிற்கு ஏற்ப மானியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

நேரடி ஆய்வு

இதன்படி 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை உள்ள கட்டிடத்திற்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக மானியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை கொண்ட கட்டிடமாக இருந்தால் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் மானியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களை உரிய அனைத்து ஆவணங்களுடன் பரிசீலித்து மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு மூலம் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி கோரி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். இதற்கான விண்ணப்ப படிவம் https://bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story