கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் இன்று (வியாழக்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் தெரிவித்தார்.
ஆய்வு
தஞ்சையை அடுத்த திருவையாறு அரசர் கல்லூரி வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பயிற்சி நடைபெற்றதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருமான ஆனந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெற உள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா? எனவும் ஆய்வு செய்தார்.
பின்னர் வீரசிங்கம்பேட்டையில் செயல்படும் பொதுவினியோக திட்ட அங்காடியில் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான டோக்கன் வழங்குவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
கலந்தாய்வு கூட்டம்
பின்னர் அவர் தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விரல்ரேகை பதிவு சரிபார்ப்பு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதையும், கலைஞர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பணிகள் செயலாக்கம் குறித்து கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருமான ஆனந்த் முன்னிலை வகித்து பேசியதாவது:-
இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்
தஞ்சை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பபதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரையும், 2-ம் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் அடுத்தமாதம் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடைபெறும்.
முதல் கட்டமாக 850 நியாயவிலைக்கடைகளில் உள்ள 3 லட்சத்து 72 ஆயிரத்து 506 குடும்ப அட்டைதாரர்களிடமும், 2-ம் கட்டமாக 333 நியாயவிலைக்கடைகளில் உள்ள 3 லட்சத்து 39 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதாரர்களிடமும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும். முதல் கட்ட முகாம் நடைபெறும் நியாயவிலைக்கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் 23-ந் தேதி வரையும், 2-ம் கட்ட முகாம் நடைபெறும் நியாயவிலைக்கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்தமாதம் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரையும் டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கப்படும்.
ஆதார் அட்டை
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப்பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பப்பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களின் நகலும் இணைக்க தேவையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமாரி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.