தேவாலயங்களை பழுதுபார்க்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்


தேவாலயங்களை பழுதுபார்க்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
x

தேவாலயங்களை பழுதுபார்க்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் திட்டத்தின் கீழ் தேவாலயத்தில் கூடுதல் பணிமேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளலாம். தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்காக பூர்த்தி செய்து வழங்கப்படும் விண்ணப்பங்களை கலெக்டர் தலைமையிலான குழு அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, தேவாலயங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்வார்கள். கட்டிடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில், இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story