தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்


தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
x

தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே தற்காலிக உரிமம் பெறும் வகையிலும், தங்களது பட்டாசு வியாபாரத்தை உரிய நேரத்தில் தொடங்குவதற்கு ஏதுவாகவும், விதிமுறைகளை கடைபிடித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் இணைய வழியில் இ-சேவை மையத்தின் மூலமாகவோ, பொது சேவை மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

வெடிமருந்து சட்டம் மற்றும் வெடிமருந்து விதிகளை முறையாக கடைபிடித்து தற்காலிக பட்டாசு கடை அமைய உள்ள இடத்தினை பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பம் செய்திட தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனைகள்

பட்டாசு விற்பனை செய்யப்படும் கடைகளில் மேல்மாடி இருக்கக்கூடாது. பட்டாசு கடையின் அருகில் மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதிகள், கட்டிடங்கள் இருக்கக்கூடாது. இது போன்ற நிபந்தனைகளை கடைபிடிக்க விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முந்தைய காலங்களில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தில் கடை வைக்க உரிமம் பெற்றவர்கள் தற்போதைய விண்ணப்பத்துடன் முன்னர் பெறப்பட்ட உரிம நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

வரைபடம்

மேலும் விண்ணப்பத்துடன் மனை வரைபடம், கடை அமைக்க இருக்கும் இடத்தின் வரைபடம், கடை அமைக்க இருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்கள், அரசுக்கணக்கில் தற்காலிக பட்டாசு உரிம கட்டணம் ரூ.600-ஐ www.karuvoolam.tn.gov.in/challan/echallan என்ற இணையதளத்தில் செலுத்தியதற்கான அசல் செலுத்துச்சீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும். மனுதாரர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் எனில், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு ஆண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை இடம் எனில் வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதம், முகவரி ஆதாரமாக (ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2 ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கண்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story