திறனாய்வு தேர்வு எழுதி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


திறனாய்வு தேர்வு எழுதி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திறனாய்வு தேர்வு எழுதி உதவித்தொகை பெற 7-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் திறனை கண்டறியவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 2023-2024-ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்படவுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் 1000 மாணவர்கள் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை பின்பற்றி 500 மாணவர்கள், 500 மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10 ஆயிரம் (மாதம் ரூ.1000 வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டபடிப்பு வரை வழங்கப்படும்.

7-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் 9 மற்றும் 10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இருதாள்களாக தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு அடுத்த மாதம்(செப்டம்பர்) 23-ந் தேதி நடக்கிறது. முதல் தாளில் கணிதம் தொடர்புடைய 60 வினாக்கள் இடம்பெறும். 2-ம் தாளில் அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் தொடர்புடைய 60 வினாக்கள் இடம்பெறும். முதல் தாள் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 2-ம் தாள் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையும் நடைபெறும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 7-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்துடன் தேர்வுக் கட்டணத் தொகையாக ரூ.50 சேர்த்து மாணவர் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வருகிற 18-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story