திருச்சி மண்டல அளவிலான ஓவிய, சிற்ப கண்காட்சியில் பங்கேற்க 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு


திருச்சி மண்டல அளவிலான ஓவிய, சிற்ப கண்காட்சியில் பங்கேற்க 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
x

திருச்சி மண்டல அளவிலான ஓவிய, சிற்ப கலைஞர்கள் கண்காட்சியில் இடம் பெறத்தக்க கலை படைப்புகளை அனுப்பலாம் என கலை பண்பாட்டுத்துறை தெரிவித்துள்ளார்.

திருச்சி:

கலை பண்பாட்டுத்துறை தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு மூலம், மாநில அளவிலான மரபு வழி, நவீன பாணி பிரிவில் ஓவிய, சிற்ப கலைக்காட்சி நடத்தி விருதுகள் வழங்குகிறது. சிறந்த ஓவியம், சிற்ப கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருது வழங்குதல், மாநில அளவிலான ஓவிய, சிற்ப கலைக்காட்சி நடத்துதல், தனிநபர், கூட்டுக் கண்காட்சி நடத்திட நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகள் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது.

கலை பண்பாட்டுத்துறையின் 7 மண்டலங்களிலும் ஆண்டுதோறும் ஓவிய, சிற்ப கண்காட்சி நடத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டுத்துறையின் திருச்சி மண்டலம் சார்பில் நடப்பாண்டில் கண்காட்சி நடைபெறவுள்ளது. (கண்காட்சி நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.)

இந்த கண்காட்சியில் சிறந்த கலைஞர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தப்பட உள்ளது. எனவே, கண்காட்சியில் பங்கு பெற விருப்பமுள்ள ஓவிய, சிற்ப கலைஞர்கள் கண்காட்சியில் இடம் பெறத்தக்க கலை படைப்புகளை அனுப்பலாம்.

படைப்புகளை வருகிற 10-ந் தேதிக்குள் மண்டல உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட்சாயல் டெப்போ சாலை, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி-620006 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும் என்று கலை பண்பாட்டு துறை மண்டல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Next Story