37 செவிலியர்கள் நியமனம்
தேனி மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் 37 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, தேனி மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டத்தில் 37 காலிப் பணியிடங்கள் இருந்தன. அதற்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். கொரோனா காலகட்டத்தில் தற்காலிக செவிலியர்களாக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய 87 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் இதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டது. கொரோனா கால கட்டத்தில் பணியாற்றிய நாட்கள், கல்வித்தகுதி, காலிப்பணியிடங்கள் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வசிப்பிட தூரம் உள்ளிட்டவை அடிப்படையில் 37 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து பணி நியமன உத்தரவு பெற்ற செலிவியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் சேர்ந்தனர். இத்தகவலை சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.