உதவி பேராசிரியர்கள் பணி நியமனம்; 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவு


உதவி பேராசிரியர்கள் பணி நியமனம்; 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

காலியாக உள்ள 372 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 2010-11ம் ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும், புதிய தற்காலிக ஆசிரியர் தேர்வுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுக்கள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில் 50 சதவீதத்தை நேரடியாக நிரப்புவது தொடர்பான வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், இது தொடர்பான வரைவு அறிவிப்பாணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும்போது 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படும் எனவும், தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு தேர்வில் 5 சதவீத சலுகை மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள 372 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதே சமயம், இறுதித் தேர்வு பட்டியலை கோர்ட்டு உத்தரவின்றி வெளியிடக்கூடாது என்றும், அதனை மூடி முத்திரையிட்ட உறையில் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை 2024 ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.



Next Story