ஆதார் மையத்தில் முழுநேர ஊழியர் நியமனம்


ஆதார் மையத்தில் முழுநேர ஊழியர் நியமனம்
x
தினத்தந்தி 1 July 2023 2:30 AM IST (Updated: 1 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் தற்காலிக ஊழியர் இருந்த தால் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் செயல்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக முழுநேர ஊழியர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நீலகிரி


கோத்தகிரி


கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் தற்காலிக ஊழியர் இருந்த தால் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் செயல்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக முழுநேர ஊழியர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


ஆதார் மையம்


கோத்தகிரி தாசில்தார் அலுவலக 2-வது தளத்தில் அரசு இ-சேவை மையம் உள்ளது. இங்கு பொதுமக்கள் வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ், அனுபோக சான்று உள்பட அரசின் பல்வேறு சான்றிதழ்களை பெறவும், ஆதார் அட்டை புதிதாக எடுக்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் ஆதார் சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. சான்றிதழ்கள் பெறுவதற்கு தற்போது இ-சேவை வசதி தனியாருக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது.


ஆனால், அங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே பெரும்பாலானோர் கோத்தகிரி தாசில்தார் அலுவலக இ-சேவை மையத்துக்கு சென்று தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை விண்ணப்பித்து, சில நாட்களில் பெற்று செல்கின்றனர். மேலும் ஆதார் மையத்தில் புதிய ஆதார் அட்டை எடுக்கும் பணி, ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் பணிகள் உள்பட ஆதார் சம்பந்தமான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ஊழியர் நியமனம்


தனியார் இ-சேவை மையங்களில் ஆதார் சேவை வழங்கப்படுவது இல்லை. எனவே, ஆதார் சம்பந்தமான அனைத்து தேவைகளுக்கும் தாசில்தார் அலுவலக ஆதார் சேவை மையத்திற்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அங்கு நிரந்தர பணியாளர் நியமிக்கப்படாததால் கடந்த 2 ஆண்டுகளாக வாரத்தில் புதன், வெள்ளிக்கிழமை என 2 நாட்கள் மட்டுமே இந்த ஆதார் மையம் செயல்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 15 முதல் 20 பேருக்கு மட்டுமே ஆதார் சேவை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் முறையான சேவை கிடைக்காததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.


எனவே, இந்த மையத்தில் முழு நேர ஊழியரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து 'தினத்தந்தி'யில் கடந்த மே மாத இறுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து சமீபத்தில் புதிய ஊழியர் ஒருவர் ஆதார் சேவை மையத்தில் நியமிக்கப்பட்டு அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விடுமுறை நாள் தவிர அனைத்து நாளிலும் மையம் செயல்படும். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த கேபிள் தாசில்தாருக்கும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.



Next Story