அர்ச்சகர்கள் நியமனம் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


அர்ச்சகர்கள் நியமனம் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிற கோவில்களின் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், ஆகம விதிகளை பின்பற்றாமல் ஓராண்டு பயிற்சி முடித்தவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாகவும் இது ஆகம விதிகளுக்கு முரணானது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படிதான் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அறங்காவலர்கள் இருக்கின்ற கோவில்களில் அவர்கள் மூலமாகவும், அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட தக்கார்கள் மூலமாகவும் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக விளக்கமளித்தார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, அர்ச்சகர்களை அறங்காவலர்கள் அல்லது தக்கார்கள் மூலமாக மட்டுமே நியமிக்க வேண்டும் என்று கூறி அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

அதே சமயம், இந்த நியமனங்களால் பாதிக்கப்பட்டதாக கருதப்படக்கூடிய நபர்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்த வழக்குகள் தனியாக பிரிக்கப்பட்டு அடுத்தகட்ட விசாரணைக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளன.


Next Story