894 பேருக்கு பணி நியமன ஆணை


894 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 6 Aug 2023 2:00 AM IST (Updated: 6 Aug 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 894 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் சி.வி.கணேசன், சு.முத்துசாமி ஆகியோர் வழங்கினர்.

கோயம்புத்தூர்
துடியலூர்


கோவையில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 894 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் சி.வி.கணேசன், சு.முத்துசாமி ஆகியோர் வழங்கினர்.


வேலைவாய்ப்பு முகாம்


முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


முகாமில் ஐ.டி., கட்டுமான நிறுவனம், நிதி நிறுவனம், கல்வி நிறுவனம், எலக்ட்ரிக்கல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட 293 நிறுவனங்கள் கலந்து கொண்டன.


அமைச்சர்கள்


முகாமில் கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8-ம் வகுப்பு முதல் என்ஜினீயரிங், இளங்கலை, முதுகலை பட்டபடிப்பு படித்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் தேர்வான நபர்களுக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.


அதைத்தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-


கலைஞர் நூற்றாண்டு


தமிழகத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1½ லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளோம். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல் முகாம் சென்னையிலும், 2-வதாக கோவையிலும் நடத்தி உள்ளோம்.


தமிழகம் முழுவதும் 100 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 100-வது முகாம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க உள்ளோம். 100-வது முகாமில் முதல்-அமைச்சரை அழைத்து பணி நியமன ஆணைகளை வழங்க திட்டமிட்டு உள்ளோம்.


தொழில்நுட்ப மையம்


தமிழகத்தில் 71 தொழிற் பயிற்சி நிலையங்களில் புதிதாக தொழில் நுட்ப மையத்தை ரூ.2,877 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப் பட்டு உள்ளது. இந்த மையங்கள் மூலம் மேலை நாடுகளில் சென்று படித்தால் எந்தளவுக்கு மாணவர்களின் தரம் இருக்குமோ அந்த தரத்தில் மாணவர்களின் திறமை மேம்படுத்தப்படுகிறது.


இந்த மையங்கள் மூலம் ரோபோடிக்ஸ் உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு இளைஞர்களை பயிற்சி கொடுக்கப்படுகிறது. எந்த ஒரு வேலைவாய்ப்பு முகாமிலும் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு குறைவாக கலந்து கொண்டது இல்லை.

அதிகபட்சமாக ஒரு வேலைவாய்ப்பு முகாமில் 78 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு சென்று தனியார் நிறுவனத்தினர் தங்களது நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்கின்றனர்.


இவ்வாறு அவர் கூறினார்.


894 பேருக்கு பணி நியமன ஆணை


இந்த முகாமில் 2 ஆயிரத்து 886 பெண்கள் உள்பட மொத்தம் 6,251 பேர் கலந்து கொண்டனர். இதில் 8 மாற்றுத்திறனாளிகள் உள்பட 894 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்தி குமார், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாநகராட்சி மேயர் கல்பனா, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தொண்டாமுத்தூர் ரவி (வடக்கு), தளபதி முருகேசன் (தெற்கு), மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, முன்னாள் எம்.பி. நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story