நெருங்கும் மகர விளக்கு பூஜை: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு


நெருங்கும் மகர விளக்கு பூஜை: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு
x
தினத்தந்தி 5 Jan 2023 1:31 PM GMT (Updated: 5 Jan 2023 1:33 PM GMT)

சபரிமலையில் மகரஜோதி பெருவிழா வருகிற ஜனவரி 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் மகரஜோதி பெருவிழா வருகிற ஜனவரி 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மகர விளக்கு பூஜை நெருங்குவதையொட்டி, சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என்ற நிலையிலும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இன்று மட்டும் 89 ஆயிரத்து 925 பேர் தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். அத்துடன் இன்று முதல் 9-ம்தேதி வரையிலும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் ஆன்லைன் முன்பதிவு 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மகரஜோதி பெருவிழாவுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் பம்பை மற்றும் புல்மேட்டில் நடைபெற்ற விபத்துக்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜோதி தெரியும் இடங்கள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜோதி தரிசனத்திற்காக மலையில் தங்கும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஜோதி முடிந்த பின்னர் பக்தர்கள் திரும்புவதற்கு ஆயிரம் பேருந்துகள் தயாராகி வருகின்றன.


Next Story