அரசு உதவிபெறும் பள்ளிகளில் தலைமை, முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஒப்புதல் - கல்வித்துறை தகவல்


அரசு உதவிபெறும் பள்ளிகளில் தலைமை, முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஒப்புதல் - கல்வித்துறை தகவல்
x

அரசு உதவிபெறும் பள்ளிகளில் தலைமை, முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

அரசு உதவிபெறும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களை நியமிக்க சில அறிவுரைகளை கோர்ட்டு வழங்கியது. அதன் அடிப்படையில், தனியார் பள்ளிகளுக்கான விதிகள்-2023 அரசால் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, பணிநிரவல் சார்ந்து சில அறிவுரைகளை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில் தற்போதைய பணியாளர் நியமனத்தின்படி, பணியிடம் உபரி என்றால், கூட்டு மேலாண்மை பள்ளியாக இருப்பின், அந்த பள்ளிகளுக்குள் பணி நிரவல் செய்யப்படவேண்டும். அதுவே ஒற்றை மேலாண்மை பள்ளியாக இருந்தால், நியமன ஒப்புதல் வழங்கி அரசு பள்ளிக்கு மாற்றுப்பணி மூலம் நியமிக்கப்பட வேண்டும்.

கடந்த 2019-ம் ஆண்டு பள்ளிக்கல்வி அரசாணைக்கு பிறகு நியமனம் செய்யப்பட்டு இருப்பின், தற்போதைய பணியாளர் நிர்ணயத்தின்படி, தகுதிவாய்ந்த பணியிடமாக இருந்தால் மட்டுமே நியமன ஒப்புதல் வழங்கவேண்டும். தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தவிர, இதர பணியிடங்கள் நியமன ஒப்புதல் வழங்குவது சார்ந்த அறிவுரைகள் தனியே வழங்கப்படும். இந்த வழிமுறைகளை பின்பற்றி எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல், தனிக்கவனம் செலுத்தி, நியமன ஒப்புதல் வழங்கிட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story