விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்க ஒப்புதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நெல் விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளதால் விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நெல் விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளதால் விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.
குறை தீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வேளாண் இணை இயக்குனர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவு இணைப்பதிவாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு எப்போது அரசின் நிவாரணம் கிடைக்கும். டெல்டா மாவட்டங்களில் உடனடியாக நிவாரணம் வழங்கி அடுத்த கட்ட விவசாயத்திற்கு சென்றுவிட்டனர். ஆனால், நாங்கள் இன்னும் ஒரு மாதத்தில் விவசாய பணிகளை தொடங்க வேண்டி உள்ளது. ஏற்கனவே வாங்கிய கடனை அடைத்தால்தான் அடுத்ததாக விவசாயத்திற்கு கடன் வாங்க முடியும். சொல்ல முடியாத அளவுக்கு அவதியில் சிக்கி தவிக்கும் நிலையில் உள்ளோம். எப்போது கிடைக்கும்? அல்லது கிடைக்காதா? என்று தெளிவாக சொல்லிவிட்டால் நாங்கள் அடுத்த வேலையை பார்த்து செல்வோம் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினர்.
ஒப்புதல்
இதற்கு கலெக்டர் பதில் அளித்து பேசும் போது, விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் இதுவரை அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதன்பயனாக தற்போது பயிர் நிவாரணம் வழங்குவதற்கான ஒப்புதலை நிதித்துறை வழங்கி உள்ளது. இனி அடுத்து அரசாணை வெளியிட வேண்டியதுதான் மிச்சம். விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது. அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள்.அரசாணை வெளியிடப்பட்டதும் உங்களுக்கு அரசின் நிவாரணம் நிச்சயம் கிடைக்கும் என்றார்.
கலெக்டரின் இந்த அறிவிப்பை கேட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உங்களைத்தான் நம்பி இருக்கிறோம் என்று கூறி அமைதியாகினர்.
7 ஆண்டு சிறை தண்டனை
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் விவசாய நிலங்களில் காட்டு எருமைகள், மான்கள், காட்டு பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. நிலக்கடலை, நெல், பருத்தி போன்ற பயிர்களை அடியோடு அழித்து தின்று பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் இறந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டால் தண்டனை அளிக்கும் அரசாங்கம், விவசாய நிலங்கள் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டால் கண்டுகொள்வதில்லை..வனத்துறையினரோ வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்பட்டால் உரிய நிவாரணம் வழங்குவதில்லை என ஒட்டு மொத்த விவசாயிகளும் குரல் எழுப்பி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறினர்.
கலெக்டர் முன் கதறி அழுத விவசாயி
அப்போது விவசாயி கண்ணப்பன் என்பவர் கலெக்டர் முன் சென்று வன விலங்குகளால் கடந்த 13 ஆண்டுகளாக கமுதியை சுற்றிய எங்கள் பகுதிகளில் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இனியும் நஷ்டத்தை தாங்க சக்தியில்லை. உடனடியாக கேரளா, மேற்குவங்கத்தை போல வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதனை தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.






