அரக்கோணம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


அரக்கோணம் நகரமன்ற கூட்டத்தில்  அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

அரக்கோணம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நகரமன்ற கூட்டம்

அரக்கோணம் நகர மன்ற கூட்டம் தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் ரகுராமன், துணைத்தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அரக்கோணம் நகராட்சியின் குடிநீர் ஆதாரமாக உள்ள கல்லாறு மற்றும் தக்கோலம் தலைமை நீரேற்று நிலைய மின் மோட்டார்களை பழுது நீக்குதல், நகராட்சி பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது:-

பூங்கா மாயம்

துரைசீனிவாசன் (தி.மு.க.) :- அரக்கோணம் டி.என்.நகரில் நாராட்சிக்கு தானமாக கொடுக்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள 38 ஆயிரம் சதுரடி பூங்கா இடம் மாயமானது.

இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த பதிலும் இல்லை. உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணப்படும்.

தலைவர்:- இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்பு (தி.மு.க.):- வார்டு பகுதியில் வளர்ச்சி திட்டப்பணி மேற்கொள்ளும் போது அந்தந்த வார்டு கவுன்சிலருக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் பணிகள் தரமாக செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்ய முடியும். வார்டு மக்கள், எந்த ஒரு குறைகளையும் அதிகாரிகளிடம் கேட்பதில்லை, கவுன்சிலர்களிடம் தான் முறையிடுகின்றனர்.

சலசலப்பு

இதுபோன்று மற்ற கவுன்சிலர்களும் அதிகாரிகள் மீது புகார்கள் தெரிவித்து பேசியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ரகுராமன் (ஆணையாளர்):- சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கவுன்சிலர்களுக்கு அனைத்து தகவல்களும் முறையாக தெரியப்படுத்தப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

நகராட்சி கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறும் என அனைத்து கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் 4 மணிக்கு கூட்ட அரங்கில் அமர்ந்திருந்தனர்.

ஆனால் 4.30 மணியாகியும் தலைவர் கூட்டத்துக்கு வரதாததால் ஆத்திர மடைந்து அங்கிருந்த மைக்கை எடுத்து அ.தி.மு.க. நகரமன்ற குழு தலைவர் ஜெர்ரி கூட்டத்தை உரிய நேரத்தில் நடத்தாத தலைவரை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சரவணன், நரசிம்மன், கோமதி, லட்சுமி ஆகியோர் கோஷங்களை எழுப்பியபடியே அரங்கத்தில் இருந்து வெளியேறினர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story