ஆரணி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தலைவர் இருக்கையை அ.தி.மு.க.கவுன்சிலர்கள் முற்றுகை


ஆரணி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தலைவர் இருக்கையை அ.தி.மு.க.கவுன்சிலர்கள் முற்றுகை
x

ஆரணி ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் இருக்கையை அ.தி.மு.க.கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு பேசி வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் இருக்கையை அ.தி.மு.க.கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு பேசி வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒன்றிய குழு கூட்டம்

ஆரணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் கனிமொழி சுந்தர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கே.டி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெ.திலகவதி மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டதாக அறிமுகம் செய்து வரவேற்றார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கவிதா அவரது கணவர் பாபுவுடனும், கவுரி அவரது மகன் கோபியுடனும், கலா ரகு தனது மகன் சதீசுடனும் பங்கேற்க வந்தனர்.

அப்போது ஒன்றிய குழு துணை தலைவர் கே.டி. ராஜேந்திரன் ஒன்றிய குழு அரங்கில் கவுன்சிலர் மட்டுமே இருக்க வேண்டும். பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்றார்.

துறை அலுவலர்கள் வரவில்லை

அப்போது கவுன்சிலர்கள் கவிதா பாபு, ஜெயபிரகாஷ், கலா ரகு, கவுரி, யசோதா சண்முகம் ஆகியோர் ஒன்றாக எழுந்து ''தற்போது 28 துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஒரு துறையில் இருந்து மட்டுமே கூட்டத்தில் அலுவலர் கலந்து கொண்டு உள்ளார்.

மற்ற துறை அலுவலர்களும் கலந்து கொள்வதில்லை. இந்த கூட்டம் ஏன் நடத்த வேண்டும் கூட்டத்தை ஒத்தி வையுங்கள்'' என ஒட்டுமொத்தமாக கூறினர்.

ஜெயப்பிரகாஷ் (அ.தி.மு.க.) பேசுகையில், ''முள்ளண்டிரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பராமரிக்கப்படவில்லை. தற்போது டெங்கு காய்ச்சல் பரவும் நிலை உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் 12 புத்தூர் பகுதியில் 2 குடும்பத்தினர் மின் இணைப்பு கேட்டு நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள், மேலும் வேதாஜிபுரம் ஊராட்சி டேங்க் ஆபரேட்டருக்கு 12 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை'' என கூறினார்.

ஆணையாளர் (கிராம ஊராட்சி) பிரபாகரன், வேதாஜிபுரம் டேங்க் ஆபரேட்டருக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மின்வாரியத்துறை சார்பில் கலந்து கொண்ட அதிகாரி, வேதாஜிபுரத்தில் மின் இணைப்பு கிடைக்காத 2 குடும்பத்தினர் பெயர் கொடுத்தால் அவர்களுக்கு மின் இணைப்பு தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

முற்றுகை

தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பின்னர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பானது.

கூட்டத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து 28 வளர்ச்சிப் பணிகள் ரூ.1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரத்தில் மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன் நன்றி கூறினார்.


Next Story