அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களிடம் பான்கார்டு எண் வாங்காமல் வைப்பு தொகை பெறப்பட்டது-வருமான வரித்துறையினர் சோதனையில் தகவல்


அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களிடம் பான்கார்டு எண் வாங்காமல் வைப்பு தொகை பெறப்பட்டது-வருமான வரித்துறையினர் சோதனையில் தகவல்
x

அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களிடம் பான்கார்டு எண் வாங்காமல் வைப்பு தொகை பெறப்பட்டது வருமான வரித்துறையினரின் சோதனையில் தெரிய வந்துள்ளது.

புதுக்கோட்டை

வருமான வரித்துறையினர் சோதனை

அறந்தாங்கியில் நகர கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கியின் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்தவர் உள்ளார். இந்த நிலையில் நகர கூட்டுறவு வங்கியில் கடந்த 22-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

வங்கியில் வாடிக்கையாளர்கள் வைப்பு தொகை விவரம் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் வட்டி விவரம் உள்பட வங்கி நடவடிக்கைகள் தொடர்பாக வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து அறிக்கை அளிக்கப்படும். இந்த அறிக்கை அளித்ததில் கணக்கு விவரத்தில் கடந்த ஆண்டு அளித்த தொகை விவரத்தையே இந்த ஆண்டும் தெரிவித்து குறிப்பிட்டுள்ளனர். இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.

பான்கார்டு எண்

இதையடுத்து வங்கியில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி கணக்கு விவரங்கள் பற்றி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருப்பதில் பலர் பான்கார்டு எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் வைப்பு தொகையாக பலர் பணம் செலுத்தியிருந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் செலுத்திய வைப்பு தொகை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வட்டி விவரம் பற்றி வருமான வரித்துறையினருக்கு தகவல் வராமல் போனது. பொதுவாக வங்கி கணக்கு எண்ணுடன் பான்கார்டு எண் இணைத்து விட்டால், வாடிக்கையாளரின் வங்கி பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகள் தொடர்பாக தானாக வருமான வரித்துறை அலுவலகத்திற்கு தகவல் வந்துவிடும். அதற்கேற்ப மென்பொருள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வைப்பு தொகை செலுத்தினால் வாடிக்கையாளர்களிடம் பான் கார்டு எண்ணை வங்கி ஊழியர்கள் கேட்டுவிடுவார்கள். மேலும் விண்ணப்ப படிவத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.

10 நாட்களுக்குள்...

இந்த நிலையில் அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் விவரங்களை கேட்டறிவதோடு, அவர்களிடம் பான்கார்டு எண் பெற்று 10 நாட்களுக்குள் சரி செய்து அறிக்கை தருமாறு வருமான வரித்துறையினர் தெரிவித்து சென்றிருக்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கான கணக்கு விவரங்களை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அறிக்கை அளித்ததில் ஏற்பட்ட தவறு தான், மற்றபடி வேறெதுவும் இல்லை என கூட்டுறவு வங்கி வட்டாரத்தில் தெரிவித்தனர்.


Next Story