மாறிவரும் உணவு பழக்கம் ஆரோக்கியம் தருவதா? ஆபத்தானதா?


மாறிவரும் உணவு பழக்கம் ஆரோக்கியம் தருவதா? ஆபத்தானதா?
x

உணவை மிருகங்கள் போல் பச்சையாக உண்டு வாழ்ந்த ஆதிமனிதன், நெருப்பை மூட்டி சுட்டுத்தின்னவும், வேகவைத்து சாப்பிடவும் கற்றுக்கொண்டான்.

அரியலூர்

துரித உணவுகள்

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் உணவும், அதை உட்கொள்ளும் விதமும் மாறிக்கொண்டே வருகின்றன. தான் வாழும் மண்ணில் விளைந்த தானியங்களையும், காய்கறிகளையும், தன்னை சார்ந்து வாழும் மிருகங்களையும், பறவைகளையும் உணவாக்கிக்கொண்டான். அவை உணவாக மட்டுமல்லாமல், அவனுக்கு மருந்தாகவும் அமைந்தன.

இன்று அறிவியல் வளர்ச்சி, நாகரிக எழுச்சி, உலகமயமாதல் போன்ற நவீனங்களால் உலகில் எங்கோ விளைந்த பொருட்கள் நமக்கு உணவாக வந்து நமது இறைப்பைகளை நிரப்புகின்றன.

பீசா, பர்க்கர், சவர்மா என்று புதுப்புது பெயர்கொண்ட துரித உணவுகள் இளைஞர்களை எச்சிலூறச் செய்கின்றன.

உள்ளூர் உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன. ருசிக்கு மாற்றார் உணவை நமது நாக்குகள் நொட்டையிட்டு ஏற்றுக்கொண்டாலும், உடலோ ஒவ்வாமையால் ஏற்க மறுத்து புதுப்புது நோய்களையும், அதற்கான மருந்துகளையும் வரவழைக்கின்றன. பக்க விளைவுகளையும் அனுபவிக்கின்றன.

ஆரோக்கியமா? ஆபத்தா?

சவர்மா சாப்பிட்ட ஓர் இளம்பெண் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் உயிர் இழந்தார். நாமக்கல்லை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடந்த சிலதினங்களுக்கு முன்பு 'சவர்மா' சாப்பிட்டதில் பலியானார். 43 பேருக்கு சிகிச்சை.

அதுபோல் நாமக்கல்லில் `பர்கர்' சாப்பிட்ட கல்லூரி மாணவருக்கு உடல்நலம் பாதிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளியில், 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட 26 பேருக்கு உடல்நலக்குறைவு போன்ற செய்திகளை தினசரி காணுகிறபோது நமது உணவு பழக்கமும், இளைய தலைமுறைகளும் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றன? என்று கேட்கத்தோன்றுவதுடன், ஆதங்கப்படவும் வைக்கின்றன.

இதுபோன்ற உணவு வகைகள் ஆரோக்கியம் தருகிறதா? ஆபத்தை விளைவிக்கிறதா? என்பது பற்றி இயற்கை ஆர்வலர்கள் கூறும் கருத்துகள் சிலவற்றைக் காண்போம்:-

ஆரோக்கிய சமுதாயம்

நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ்:- வாழ்க்கையில் நீண்ட காலம் நோய், நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு பழக்க வழக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக 'ஜங்க் புட்' என்று அழைக்கப்படும் பீசா, பர்க்கர், சவர்மா போன்ற உணவுகளைத்தான் 10 முதல் 15 வயது உள்ள குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் இந்த வகை உணவுகளுக்கு அடிமையாகிவிடுவதுடன், வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளையும் அவர்கள் விரும்புவதில்லை. 'பாஸ்ட் புட்' என்று அழைக்கப்படும் விரைவாக தயாரித்து வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் உடம்புக்கு பயனில்லாத பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுகின்றன. இந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு அஜீரணம், வயிற்றுவலி மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன. நமது உணவு முறைகளில் மைதா, கியாஸ் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், வெள்ளை சர்க்கரை (சீனி), அஜினோமோட்டோ போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களால் உடலுக்கு உபாதைகள்தான் ஏற்படும். அத்துடன் வெள்ளை ரொட்டி, நூடுல்ஸ், சேமியா போன்றவற்றில் மைதா சேர்க்காததை வாங்கி வீட்டில் சமைத்து உண்ணலாம். காய்கறிகள் மற்றும் சிறுதானிய உணவுகளை ருசியாக தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

பின்விளைவுகளை ஏற்படுத்தும்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் முத்துக்குமார்:- ஒரு காலத்தில் ஏழைகளுக்கு கிட்டாத துரித உணவுகள் இன்று எளிதில் கிடைக்கிறது. உடலுக்கு தீமை ஏற்படுத்தும் துரித உணவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகிறார்கள். இன்னொரு பக்கம் மேல்தட்டு மக்கள் அதிக ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்க்கிறார்கள். எந்த உணவாக இருந்தாலும், உணவின் செரிமானமானது, இயற்கையானதாக இருக்க வேண்டும். உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அதற்கு காய்கறிகள், சிறுதானிய உணவுகள்தான் சரியானது. ஆனால், பீசா, பர்கர், சவர்மா போன்ற உணவுகள் கண்டிப்பாக பின்விளைவுகளை ஏற்படுத்தும். சவர்மாவில் கொழுப்பு நிறைந்துள்ளது. இதனால் இதய நோய்கள், இரைப்பை குழாயில் பிரச்சினை உண்டாகும். பசியுடன் இருக்கும்போது இதனை சாப்பிட்டால் கணையமும் பாதிக்கப்படும். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தற்போது சர்க்கரை நோய் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விரைவான உணவுகளை உட்கொள்வது விரைவான ஆபத்து என்பதால் இதனை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.

நோயற்ற வாழ்வு

காரைக்குறிச்சியை சேர்ந்த ப்ரீத்தி:- நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவுகளை உண்டு நோய் நொடியின்றி நலமுடன் வாழ்ந்து வந்தனர். அப்போதெல்லாம் உணவுக்கு தனி மரியாதை இருந்தது. இன்றைய காலங்களில் அவசரகதியில் வாழ்க்கை அமைந்து விட்டது. போகிற போக்கில் கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே மண் மணம் மாறாமல் அந்தந்த மண்ணில் விளையும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதின் மூலம் நோயற்ற வாழ்வை பெறலாம் என்பது மூத்தோர்களின் அனுபவ மொழி. துரித உணவுகளை எடுத்துக் கொள்வதின் மூலம் நமது வாழ்க்கையை துரிதமாக முடித்துக் கொள்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும்.

ஓட்டல், கடைகளில் ஆய்வு

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்:- நம் முன்னோர்கள், கிடைக்கும் உணவை இயற்கை தன்மை மாறாமல் சமைத்து உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். அதனால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். உணவே மருந்து என்ற காலம் மாறி தற்போது மருந்தே உணவாகி போனது. இதற்கு காரணம் நம் பாரம்பரிய உணவு பழக்கம் மாறி துரித உணவுகளுக்கு (பாஸ்ட் புட்) அடிமையாகி போனதே. தற்போது பீசா, பர்கர், சவர்மா உள்ளிட்டவை நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிட்டது. கிராமம், நகரம் என்கிற பேதம் இல்லாமல் பொதுவான உணவு கலாசாரமாக மாறி வருகிறது. துரித உணவு வகைகளின் சுவையில், அதன் பின்விளைவுகளைப் பொதுவாக யாரும் கருத்தில் கொள்வதில்லை. தொடர்ந்து துரித உணவு வகைகளையே சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இன்றைய தொழில்நுட்ப உலகம், மீதமான உணவை குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி அதிகமாக சாப்பிட தொடங்கிவிட்டது. குறிப்பாக மாமிச புரத உணவுகள் குளிர், மீண்டும் சூடாக்குதல் போன்றவற்றால் வேறு விதமாக மாறி அதன் உண்மையான தன்மையுடன் இருக்காது. இது உடலுக்கு தீங்கு விளைவிப்பது உறுதி. எனவே இனியாவது பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி நோய்கள் இன்றி வாழ தொடங்குவோம். மேலும் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஓட்டல், கடைகளில் உணவு பொருட்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவு தொடர்பான புகார்கள் எதுவானாலும், 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், Food Safety Connects என்ற செல்போன் செயலியின் மூலமாகவும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story