இலவசங்கள் அவசியமா?


இலவசங்கள் அவசியமா?
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இலவசங்கள் அவசியமா? என்றுபொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி

தமிழ்நாட்டில் இலவசங்களுக்கு பஞ்சம் இல்லை. அதனால்தான் நாட்டில் பஞ்சமும் இல்லை என்கிறார்கள் சிலர்.

இன்னும் சிலரோ இல்லாதவர்களுக்குத்தான் இலவசம். எல்லோருக்கும் இலவசம் என்பதை ஏற்க முடியாது. அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், நம்மவர்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார்கள்.

உயிர் ஆதாரம்

இருந்தாலும் கொரோனா காலங்களில் வாழ்வு ஆதாரங்களை இழந்து தவித்த அப்பாவி மக்களுக்கு உயிர் ஆதாரங்களாய் இருந்தது இலவசங்கள் என்பதை கண்கூட காண முடிந்தது.

பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இலவச உணவு,

இலவச சீருடை, இலவச புத்தகங்கள், இலவச சைக்கிள்கள், இலவச மடிக்கணினிகள், ஏழை பிள்ளைகளின் படிப்புக்கு உதவித்தொகை, அரசு ஆஸ்பத்திரிக்கு இலவச சிகிச்சை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச வீடு, இலவச அரிசி, இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு, கோவில்களில் அன்னதானம் என்றெல்லாம் வழங்கப்பட்டு வருவதை வெறுமனே இலவசங்கள் என்று எளிதாக சொல்லிவிடவோ, புறம் தள்ளிவிடவோ முடியாது.

இருந்தாலும் மீனை கொடுப்பதைவிட, தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்று கூறுவது உண்டு.

பிரதமர் நரேந்திரமோடி எதிர்ப்பு

இந்த இலவசங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. ஏதோ ஒரு வடிவில் எல்லா மாநிலங்களிலும் சில இருக்கத்தான் செய்கின்றன.

இந்த நிலையில் மாநில அரசுகளின் இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி, தனது கருத்தை வலுவாக பதிவு செய்து இருக்கிறார். இலவச திட்டங்கள் வரி செலுத்துகிறவர்களுக்கு வலியை தருகின்றன என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தேர்தலின்போது வாக்காளர்களை கவர்வதற்காக இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து. இந்த மோசமான கலாசாரத்தை மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவச திட்ட கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதிபட கூறி இருக்கிறார்.

இதுபற்றி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

வேலைவாய்ப்பு உருவாக்க...

தியாகதுருகம் கல்லூரி முதல்வர் பாஸ்கரன்:- ஒவ்வொரு தேர்தலின் போதும் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கும் நிலை வந்து விட்டது. எனவே இலவசங்களை முற்றிலும் தவிர்த்து விட்டு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை கொண்டு வரலாம். மேலும் கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு தரமாகவும், அதி நவீன தொழிட்நுட்பத்துடன் கிடைக்க வழிவகை செய்யலாம்.

ஏழைகளுக்கு இலவச திட்டம் வேண்டும்

தியாகதுருகம் விவசாயி தேவன்:- அரசியல் கட்சிகள், வாக்காளர்களை கவர்வதற்காக மட்டுமில்லாமல் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் இலவச திட்டங்களை வரவேற்கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டம் அவசியமாக உள்ளது. இதன் மூலம் அவர்கள் ஆடுகளை வளர்த்து தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும். இதேபோல் ஏழைகளுக்கான இலவச திட்டங்கள் தொடர வேண்டும். இந்த திட்டங்கள் தகுதியான பயனாளிகளை சென்றடைய வேண்டும்.

வறுமை நீங்கும் வரை கட்டாயம்

விழுப்பும் வியாபாரி ஷேக்தாவூத்:- வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. அன்றாடம் கூலி வேலை செய்துதான் வயிற்றுப்பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஒரு தெருவில் நடந்து செல்லும்போது குறைந்தது, யாசகம் எடுப்பவர்கள் 5 பேரை கடந்து செல்லக்கூடிய நிலைதான் இருக்கிறது. எத்தனையோ உழைக்கும் மக்கள் அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து அன்றாடம் அவர்களது உணவு தேவையைத்தான் பூர்த்தி செய்கின்றனா். அடிப்படை வசதிகளே இல்லாத மக்கள், சாலையோரங்களிலும், பிளாட்பாரங்களிலும் இருப்பதை நாம் பார்க்கிறோம். பணக்காரன் பணக்காரனாகத்தான் இருக்கிறான், ஏழை இன்னும் ஏழையாகவே இருக்கிறான். யாசகம் எடுப்பவர்கள் நம் கண்ணில் தென்படாத வரையும், வறுமைக்கோடு நீங்கும் வரையும் அரசு அளிக்கும் இலவச திட்டங்கள் தொடர வேண்டும். எங்களைப்போன்ற வியாபாரிகள், அரசுக்கு செலுத்தும் வரிகள், ஏழை- எளிய மக்களுக்கு இலவச நலத்திட்டங்கள் மூலம் பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஏனெனில் நாங்கள் மறைமுகமாக ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதாக கருதுகிறோம். வறுமை நீங்கும் வரை கட்டாயம் இலவச திட்டங்களை கொடுத்தே ஆக வேண்டும்.

இலவசத்தை திணிக்கிறார்கள்

கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த இல்லத்தரசி கலைமணி:-

மத்திய, மாநில அரசுகளின் இலவச திட்டம் என்பது, இயலாத மக்களுக்கு தேவையானவற்றை அளித்து குடிமக்களை சமத்துவமாக சமமாக பாதுகாக்கும் பொருட்டே கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது முற்றிலும் இலவசத்தை வைத்து மிகப்பெரிய அரசியலே நடக்கிறது. இந்திய நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமையான கல்வி, சுகாதாரம், சமத்துவம், வேலைவாய்ப்பு இதுவே அடிப்படை உரிமையாக இருக்கிறது. இவை அனைத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டு அரசியல் லாபத்திற்காக தேவையில்லாத இலவசத்தை மக்களின் மீது திணிக்கிறார்கள். தமிழ்நாடு போன்ற கடனில் தத்தளிக்கும் மாநிலத்தில் அரசியல் லாபத்திற்காக இலவசங்களை அள்ளிக்கொடுத்து விட்டு அதற்கு வட்டி கட்டிக்கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று. ஒருபுறம் மத்திய அரசு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி போட்டு வாட்டுகிறது. மற்றொருபுறம் தமிழக அரசு, மின்சார கட்டணம், வீட்டு வரி போன்றவற்றை உயர்த்தி ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை சங்கடப்படுத்துகிறது.

சமூக மாற்றத்திற்கு இலவசம் அவசியம்

கடலூர் பெரியார் கலைக்கல்லூரி சமூக பணியியல் துறைத்தலைவர் சேதுராமன்:- மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பயில்வதில் குடும்பம் சார்ந்து, சமூகம் சார்ந்து எத்தகைய சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை பல்லாண்டுகளாக அறிந்த அனுபவத்தின் அடிப்படையில் "6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குகின்ற புதுமைப்பெண் திட்டம்" உண்மையிலேயே போற்றுதலுக்குரிய திட்டமாக இருப்பதை உணர முடிகிறது. இது பெண் கல்வியை ஊக்குவிப்பதில் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதேபோல் மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டால், அவற்றை வாங்குவது குறித்து நினைத்துக் கூடப் பார்க்க இயலாத நிலையில் இருக்கும் குடும்பங்களில் இருந்து உயர்கல்வி பயில வந்துள்ள மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். பள்ளி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் அவர்கள் விரும்புகின்ற பட்டப்படிப்பு முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கும், பட்டப்படிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் பட்டமேற்படிப்பு முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தினால் அது மாணவர்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும். ஆகவே, இலவசங்கள் என்பது சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும் நிலையில் அவை தொடர வேண்டியது அவசியமாகும்.


Next Story