ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்த திட்டமா? நெய் விலை உயர்வுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்


ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்த திட்டமா? நெய் விலை உயர்வுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்
x

கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது என்று அண்ணாமலை சாடியுள்ளார்.

சென்னை,

நெய் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஆவினில், 5 லிட்டர் நெய், 2,900 ரூபாயில் இருந்து 3,250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் ரூ.580 ரூபாயில் இருந்து, ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் 290 ரூபாயில் இருந்து ரூ. 315 ஆக உயர்ந்துள்ளது என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 200 மி.லி நெய் 130 ரூபாயில் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு, இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு ஆவின் ஆரஞ்சு நிற பால் விலையை 12 ரூபாய் உயர்த்தியதன் விளைவாக அதன் விற்பனை சரிந்தது. தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதா திறனற்ற திமுக அரசு?. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story