நகராட்சி,பேரூராட்சிகளில் பகுதி சபா கூட்டம்


நகராட்சி,பேரூராட்சிகளில் பகுதி சபா கூட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2022 6:45 PM GMT (Updated: 2 Nov 2022 6:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நகராட்சி,பேரூராட்சிகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் நகராட்சி பகுதி சபா கூட்டம் 2-வது வார்டு அன்பு நகர் பகுதியில் நடந்தது. நகராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தி.மு.க. வார்டு செயலாளர் பொன் முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக நகராட்சி கமிஷனர் வேலவன் கலந்து கொண்டு மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில், 2-வது வார்டுக்குட்பட்ட அன்பு நகர், பி.டி.ஆர். நகர், கோகுல் நகர், ஜெயந்தி நகர் பொதுமக்கள் கலந்து கொண்டு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுத்த மனுவின் மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், நகர தி.மு.க. அவை தலைவர் சித்திரைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி நகரசபை 36 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் நடந்தது.

நகரசபை தலைவர் கருணாநிதியின் 16-வது வார்டில் பகுதி சபா கூட்டம் அவர் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ராஜாராம், பொறியாளர் ரமேஷ், வார்டு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் வார்டு குறைகள் குறித்து பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கப்பட்டது.

நகரசபை துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் தனது 11-வது வார்டில் பகுதி சபா கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் வார்டு மக்கள் கலந்துகொண்டு வார்டு பிரச்சினைகளை தெரிவித்தனர்.

கழுகுமலை

கழுகுமலை பேரூராட்சி சார்பில் 4-வது வார்டில் நடந்த பகுதி சபா கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர் ஜோஸ்பின்தங்கமணி தலைமை தாங்கினார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. பின்னர் கழுகுமலை திருமாளிகை தெரு பகுதியில் பேவர்பிளாக் சாலை மற்றும் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வசதி, உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அதிகாரியிடம், சீவலப்பேரி குடிநீர் 20 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அதுவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தனர். சுகாதாரமான குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். பின்னர் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் குறித்து இளநிலை உதவியாளர் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத்தில் உள்ள 18 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களில் நகரப்பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நிர்வாக அதிகாரி கணேசன் மற்றும் நகரப்பஞ்சாயத்து அலுவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

ஆத்தூர்

இதேபோல ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களில் நகரப்பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் மற்றும் நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டனர். மேலும் பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.

உடன்குடி

உடன்குடி பேரூராட்சி 3-வது வார்டில் உறுப்பினர் ச.மும்தாஜ் பேகம் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத்தலைவர் மால்ராஜேஷ், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், மற்றும் சுயம்புராஜ், முகமது சலீம், ஹாஜா முகைதீன், முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. பேரூராட்சி பகுதியில் குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். வனத்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

உடன்குடி சோமநாதபுரத்திலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. செட்டியாபத்து ஊராட்சி தேரியூரில் ஊராட்சி மன்றத் தலைவர் க.பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது.

கயத்தாறு

கயத்தாறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் பகுதி கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இதில் 8-வது வார்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேரூராட்சி நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், அனைத்து நிர்வாக அலுவலர்களும் கலந்துகொண்டனர். இதில் முக்கிய தீர்மானமாக வார்டு பகுதியில் 100 சதவீத குடிநீர் மற்றும் தெரு விளக்கு ஏற்பாடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கயத்தாறு நகருக்குள் அனைத்து வழித்தட பஸ்கள் வரவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் 10-வது வார்டு பள்ளிவாசலில் பேரூராட்சி துணை தலைவர் சபுராசலிமா தலைமை தாங்கினார். 13-வது வார்டில் கவுன்சிலர் நயினார் தலைமையில் பகுதிசபா கூட்டம் நடைபெற்றது.


Next Story