தங்க, வைர நகைகளை திருடிய பொக்லைன் டிரைவர் கைது
முத்தூர் அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து தங்க, வைர நகையை திருடி சென்ற பொக்லைன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மூதாட்டி வீடு
திருப்பூர் மாவட்டம் முத்தூர்-காங்கயம் சாலை ரங்கப்பையன்காடு பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி யசோதா (வயது 72) என்பவர் வசித்து வருகிறார்.
கடந்த 9-ந் தேதி காலை 9 மணிக்கு யசோதா வீட்டை பூட்டிவிட்டு அய்யம்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் மறுநாள் 10-ந் தேதி காலை 7 மணிக்கு தனது வீட்டிற்கு மீண்டும் திரும்பி வந்தபோது வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை-பணம் திருட்டு
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த 27 பவுன் தங்க, வைர நகை மற்றும் ரொக்கம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டது தெரிய வந்தது. இது பற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமரா
இதுபற்றி யசோதா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க, வைர நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் வெள்ளகோவில் போலீசார் நேற்று முன்தினம் காலை வெள்ளகோவில் - கரூர் சாலையில் குருக்கத்தி போலீஸ் சோதனை சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தன் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.
பொக்லைன் டிரைவர்
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தாண்டவன் குளம், நவநீத கண்ணபுரம் பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் விஜயபாஸ்கர் (27) என்பதும், பொக்லைன் வாகன டிரைவர் என்பதும், யசோதா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தங்க, வைர நகை மற்றும் பணத்தை திருடி சென்றவர் என்பதும் தெரியவந்தது. விஜயபாஸ்கரிடம் இருந்து போலீசார் 19 பவுன் தங்க, வைர நகைகளை மீட்டு அவரை கைது செய்தனர்.