குடிபோதையில் தகராறு செய்த கணவரை சரமாரி வெட்டிய பெண்
நெல்லை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை சரமாரியாக வெட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
நெல்லை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை சரமாரியாக வெட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி
நெல்லை அருகே உள்ள பத்தமடை அன்னை நாகம்மாள் தெருவை சேர்ந்தவர் ஆண்டியப்பன் என்ற வேலு (வயது 50), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராமலட்சுமி (45). இவர்களுக்கு அனுசியா (21), மீனா (17) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
அவர்களில் மூத்த மகள் அனுசியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. வேலுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அரிவாள் வெட்டு
நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் குடிபோதையில் இருந்த வேலு, மனைவியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். மேலும் அவர், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராமலட்சுமியை வெட்ட முயன்றார்.
அப்போது சுதாரித்துக் கொண்ட ராமலட்சுமி அரிவாளை பிடுங்கி கணவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. உடலில் வெட்டுக்கள் விழுந்ததால் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் ராமலட்சுமி அங்கிருந்து வீரவநல்லூரில் உள்ள தனது மூத்த மகள் வீட்டுக்கு தப்பிச்சென்று விட்டார்.
ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
வீட்டில் வேலு ரத்தக் காயங்களுடன் கிடப்பதை நேற்று காலை அக்கம்பக்கத்தினர் பார்த்து பத்தமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேலுவை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மனைவி கைது
இந்த சம்பவம் தொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வீரவநல்லூருக்கு விரைந்து சென்று ராமலட்சுமியை கைது செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடிபோதையில் தகராறு செய்த கணவரை மனைவியே அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.