ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்


ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x

ஊசூரில் ஆக்கிரம்பை அகற்றவந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

ஆக்கிரமிப்பு

வேலூர் மாவட்டம், ஊசூரில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக 7 தனியார் செங்கல் சூளைகள் மற்றும் வீடுகளை கட்டி சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இந்த செங்கல் சூளைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அவர்களே அகற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வில்லை.இதனை அடுத்து அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி கண்ணன், துணை தாசில்தார் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் மற்றும் அரியூர் போலீசார் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது செங்கல் சூளை உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக முன் அறிவிப்பு வழங்கப்படவில்லை, மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.அப்போது செங்கல் சூளை பெண் உரிமையாளர் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மண்எண்ணெய் கேனை பிடுங்கினர்.

தொடர்ந்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் 2 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story