போலீசாருடன், அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்


போலீசாருடன், அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:45 PM GMT)

உண்ணாவிரத பந்தல் அமைக்கும் பணியை தடுத்ததால் போலீசாருடன், அ.தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

உண்ணாவிரத பந்தல் அமைக்கும் பணியை தடுத்ததால் போலீசாருடன், அ.தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்தனர்.

உண்ணாவிரத போராட்டம்

சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு மற்றம் தி.மு.க. அரசு மற்றும் பொள்ளாச்சி நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (வியாழக்கிழமை) பொள் ளாச்சி திருவள்ளுவர் திடலில் காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

உண்ணாவிரதத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முடித்து வைக்கிறார்.

உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொள்வதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

இதை அறிந்த பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் விரைந்து வந்து பந்தல் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பந்தல் அமைக்கும் பணியை நாளை (இன்று) மேற்கொள்ள வேண்டும் என்று போலீசார் கூறினர். இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பந்தல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

திட்டமிட்டபடி நடக்கும்

இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறுகையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டு உள்ளது. ஆனாலும் போலீசாரின் உதவியுடன் போராட்டத்தை நடத்த விடாமல் தி.மு.க.வினர் தடுக்க நினைக்கின்றனர்.

நாளை (இன்று) மீண்டும் பந்தல் அமைக்கும் பணி தொடங்கும். திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இதில் திரளான பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொள்வார்கள் என்றார்.


Next Story