சேலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறியஅரூர் வனத்துறை அதிகாரிக்கு ரூ.2,700 அபராதம்போலீசாருடன் வாக்குவாதம்
சேலம்
சேலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறிய அரூர் வனத்துறை அதிகாரிக்கு ரூ.2,700 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
உதவி வன பாதுகாவலர்
சேலம் அஸ்தம்பட்டி ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). இவர், தர்மபுரி மாவட்டம் அரூரில் உதவி வன பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் சேலம் குகையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் மனைவியை சரவணன் அழைத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அங்கிருந்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்த அவர் ஒருவழிப்பாதையில் போக்குவரத்து விதியை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மேலும் அந்த வழியாக சாலையில் சென்ற பெண் மீது எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் அந்த பெண் நிலைதடுமாறி சாலையில் கீழே தவறி விழுந்தார். உடனே சரவணன் தனது மோட்டார் சைக்கிளை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு அந்த பெண்ணை தூக்க முயன்றார்.
அபராதம் விதிப்பு
இது ஒருபுறம் இருக்க, இந்த சம்பவத்தை கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்தனர். பின்னர் அவர்கள் அங்கு விரைந்து சென்று ஒருவழிப்பாதையில் மோட்டார் சைக்கிளில் எப்படி வரலாம்? என்று சரவணனிடம் கேள்வி கேட்டனர். இதையடுத்து அவரின் மோட்டார் சைக்கிளை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது, சரவணன் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது அவருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு எடுத்து வந்தனர். பின்னர் ஹெல்மெட் அணியாதது, ஒருவழிப்பாதையில் வந்தது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறிய காரணத்தால் ரூ.2,700 அபராதத்தை அவருக்கு போலீசார் விதித்தனர்.
இதையடுத்து உதவி வன பாதுகாவலர் சரவணன், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அங்கிருந்த போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அபராத தொகையை கோர்ட்டில் கட்டுமாறு கூறி அதற்குரிய ரசீதை உதவி வன பாதுகாவலரிடம் போலீசார் வழங்கினர். பின்னர் அவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.