அரிகேசவநல்லூர் அரியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்


அரிகேசவநல்லூர் அரியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
x

அரிகேசவநல்லூர் அரியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 123 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

அரிகேசவநல்லூர் அரியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 123 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

அரியநாத சுவாமி கோவில்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அரிகேசவநல்லூரில் அமைந்துள்ளது பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி கோவில். சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், சிவலிங்கம் குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டதாகும்.

இங்கு சனிபகவானின் துணைவி ஜேஸ்டாதேவிக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் 1900-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

தற்போது கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 2-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

நேற்று அதிகாலை விக்னேஸ்வர பூஜையை தொடர்ந்து புண்ணியாக வாசனம், 6-ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளலை தொடர்ந்து பெரியநாயகி, அரியநாத சுவாமி விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. சுமார் 123 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா கவர்னர் பங்கேற்பு

விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், எம்.எல்.ஏ.க்கள் இசக்கி சுப்பையா, நயினார் நாகேந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அரிகேசவநல்லூர் வெங்கட்ராமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம், தீபாராதனை, இரவில் சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியவை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி அரிகேசவநல்லூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் வரவேற்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக நெல்லைக்கு வந்த தெலுங்கானா கவர்னருக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.


Next Story