அரிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு
அரிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிமுத்தாறு வன சோதனை சாவடியை முற்றுகையிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்பை:
தேனி மாவட்டத்தை கலங்கடித்த அரிக்கொம்பன் யானை நேற்று மாலை 5.20 மணி அளவில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வன ேசாதனை சாவடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு மேல் வனத்துறையினர் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் பத்திரிகையாளர்கள், வனத்துறையினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அரிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென்று சோதனை சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் பல உயிர்களை பலி வாங்கிய அரிக்கொம்பன் யானையை விட்டால் உயிர் சேதம் ஏற்படும். எனவே, வனத்துறையினர் வேறு ஏதேனும் முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட தலைவர் பீர்மஸ்தான், புறநகர் மாவட்ட செயலாளர் சுலைமான், வர்த்தக அணி மாவட்ட தலைவர் ஜலீல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துசென்றனர்.