அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்தது


அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்தது
x

அரியலூரில் ரூ.347 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரியலூர்

அரசு மருத்துவக்கல்லூரி

அரியலூர்-செந்துறை சாலையில் 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கு தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய நிர்வாக அலுவலகம், 6 மாடிகளுடன் கூடிய மருத்துவக்கல்லூரி, வங்கி, அஞ்சல் நிலையம், மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் கூடிய கட்டிடம், 9 நவீன ஆபரேஷன் தியேட்டர்கள், மாணவ-மாணவிகளுக்கு 5 மாடிகள் கொண்ட விடுதி கட்டிடம், பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 700 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு மட்டும் பகுதி நேரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முழுநேரமாக செயல்படும்

இந்தநிலையில் கடந்த வாரம் முதல் இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. உள்நோயாளிகளுக்கு பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய மருத்துவமனைக்கு உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு மாற்றப்பட்டுள்ளது. இங்கு எம்.ஆர்.ஐ. சி.டி. ஸ்கேன் அமைக்கும் பணிகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது. அந்த பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் திறக்கப்படும் என தெரிகிறது.

பிரசவ-குழந்தைகள் வார்டுகள்

தற்சமயம் பழைய அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டும், குழந்தைகள் சிகிச்சை வார்டும் மட்டும் செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த வார்டுகளையும் புதிய மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய மருத்துவமனை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story