அரியலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி


அரியலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி
x

அரியலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர்

அரியலூரில் பழைய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு சுமார் 42 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் கட்டிடங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வந்தன. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எனவே பயணிகளின் நலன் கருதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க அரியலூரில் புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி அரியலூர் அண்ணா சிலை அருகில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடக் கட்டுமானப் பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கினார். இந்த புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் அமையப்பெறுவதுடன், அனைத்து பஸ்களும் நெருக்கடி இன்றி வந்து செல்லும் வகையிலும், போதிய இட வசதியுடனும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தி இப்புதிய பஸ் நிலையக்கட்டிட கட்டுமானப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தற்போது தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. பழைய பஸ் நிலையத்திற்கே பஸ்கள் வந்து செல்கின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் விரைவில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்தனர்.


Next Story