கிரிக்கெட் மட்டையால் நண்பரை அடித்து கொன்ற அரியலூர் வாலிபர் கைது
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரில் யார் சிறந்த வீரர்? என்பதில் ஏற்பட்ட தகராறில் தனது நண்பரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற அரியலூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் கொலை
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவருடைய மகன் விக்னேஷ் (வயது 25). இவர் நேற்று முன்தினம் மல்லூர் கிராமத்தில் இருந்து பொய்யூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சிட்கோ தொழில்பேட்டைக்கு அருகே திறந்தவெளியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், சம்பவத்தன்று மாலை விக்னேஷின் நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த சுப்பு என்பவரின் மகன் தர்மராஜ் (21) அவரை கிரிக்கெட் விளையாட அழைத்துச்சென்றது தெரியவந்தது.
சிறந்த வீரர் யார்?
இதையடுத்து தர்மராஜை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிறந்தவர் யார்? என்பதில் ஏற்பட்ட தகராறில் விக்னேஷை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கிரிக்கெட் விளையாட்டு முடிந்தவுடன் நானும், விக்னேசும் தொழிற்பேட்டைக்கு அருகே உள்ள திறந்தவெளியில் மது அருந்தினோம். அப்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரில் யார் சிறந்த வீரர்? என்பதில் எங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.
சிறையில் அடைப்பு
இதில் ஆத்திரம் அடைந்த நான் மதுபோதையில் கிரிக்கெட் மட்டையால் விக்னேஷின் தலையில் பலமாக தாக்கினேன். இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, நான் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, தர்மராஜை போலீசார் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிரிக்கெட் வீரர்களுக்காக இரு நண்பர்களிடையே விளையாட்டாக ஆரம்பித்த வாக்குவாதம் கொலை வரை சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.