ராணுவத்தில் சேர 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்கோவை ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் தகவல்


ராணுவத்தில் சேர 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்கோவை ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 7 March 2023 7:00 PM GMT (Updated: 7 March 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

ராணுவத்தில் சேர வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் ராகுல் பரத்வாஜ் தெரிவித்தார்.

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேற்று ராணுவத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கோவை ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் ராகுல் பரத்வாஜ் தலைமை தாங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:- பொதுவாக ராணுவ ஆட்சேர்ப்பில் முதலில் உடல் தகுதி தேர்வும், பின்னர் எழுத்து தேர்வு நடக்கும். தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு முதல் முறையாக ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுவோர் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

இந்த ஆன்லைன் தேர்வு வருகிற ஏப்ரல் 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நாடு முழுவதும் 176 இடங்களில் நடக்கிறது. இதில் ராணுவ துறையில் 9 பிரிவுகளிலும் மற்றும் அக்னி பாத் தேர்வு 6 பிரிவுகளிலும் தேர்வுகள் நடக்கின்றன. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.joinindianarmy.nic.in என்கிற இணையதளத்தில் வருகிற15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பிரிவிற்கான வயது வரம்பு, கல்வித்தகுதிகள், வழிமுறைகள், மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்டவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்ப கட்டணம் ரூ.500. இதில் ரூ.250 ராணுவம் பங்களிப்பாக வழங்கும். தேர்வு எழுதுவோர் ரூ.250 செலுத்தினால் போதும். ஒரு விண்ணப்பதாரர் தேர்வு எழுத 5 மையங்களை தேர்வு செய்யலாம். அதில் ஒரு மையம் அவர்களுக்கு ஒதுக்கப்படும்.

தகுதியின் அடிப்படையில் பணி

மேலும் விவரங்களை jiahelpdesk2023@gmail.com மற்றும் joinindian army@gov.in ஆகிய இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பலர் நாட்டிற்காக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி உள்ளனர். அதே போல், முன்னாள் ராணுவவீரர்களின் குழந்தைகள், இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிட முன்வரவேண்டும்.

மேலும், ராணுவத்தில் தகுதியின் அடிப்படையில்மட்டுமே வேலை கிடைக்கும்.

ராணுவ பணிக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும், யாராவது வேலை சேர்த்து விடுவதாக பணம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சுபேதார் மேஜர் மதன்லால், ஹவில்தார் குல்தீப்சிங், கிருஷ்ணகிரி முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story