வேலூரில் நவம்பர் 15-ந்தேதி முதல் 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்


வேலூரில் நவம்பர் 15-ந்தேதி முதல் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்
x
தினத்தந்தி 17 Aug 2022 3:18 PM GMT (Updated: 17 Aug 2022 3:41 PM GMT)

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் வேலூரில் நவம்பர் 15-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

சென்னை,

'அக்னி பத்' திட்டத்தின் கீழ், பொதுப்பணி, தொழில்நுட்பம், கிளார்க், ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணி பிரிவுகளுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் வேலூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நவம்பர் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் கட்டுப்பாட்டில் வரும் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள்,www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளத்தில் கடந்த 5-ந்தேதி முதல் பதிவு செய்து வருகின்றனர். விண்ணப்பத்துக்கான பதிவு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதியுடன் நிறைவடைகிறது. நுழைவு அட்டை நவம்பர் 1-ந்தேதி ஆன்லைன் முறையில் வழங்கப்படும். அன்றைய தினம் முதல் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்திலும், பதிவு செய்யப்பட்ட இ-மெயில் முகவரியிலும் விண்ணப்பதாரர்கள் நுழைவு அட்டையை சோதித்துக் கொள்ளலாம்.

ஆள்சேர்ப்பு முகாமில் எந்த நாள் மற்றும் எந்த நேரத்தில் வரவேண்டும் என்பது தொடர்பான விவரம் நுழைவு அட்டையில் குறிப்பிடப்படும். ஆள் சேர்ப்பு முகாம் தொடர்பான சந்தேகங்கள், விவரங்கள் மற்றும் உதவிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள ஆள்சேர்ப்பு அலுவலகத்தை (தலைமை அலுவலகம்) 044-25674924 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

ராணுவ ஆள்சேர்ப்பு நடைமுறைகள் முழுவதுமாக தானியங்கி முறையிலும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதற்கு உதவி செய்வதாக யாரேனும் மோசடி நபர்கள் யாரேனும் அணுகினால், அவர்களை விண்ணப்பதாரர்கள் நம்பவேண்டாம். கடின உழைப்பு மற்றும் தயார் நிலை ஆகியவை தான் தகுதி பட்டியலில் இடம் பெறுவதை உதவி செய்யும்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story