திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ராணுவ வீரர் மனு


திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ராணுவ வீரர் மனு
x

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ராணுவ வீரர் மனு அளித்தார்.

திருச்சி

திருச்சி:

சங்கிலி பறிப்பு

திருச்சி மாவட்டம் முசிறி பேரூரை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 33). இவர் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் ராணுவ வீரராக உள்ளார். தற்போது இவர் காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி. கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி நள்ளிரவு கலைவாணி வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 8¾ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்றார்.

இது பற்றி அறிந்த ராணுவ வீரர் நீலமேகம் காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து, தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நீலமேகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

சூப்பிரண்டிடம் மனு

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், நீலமேகத்தின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி கலைவாணியிடம் நடந்த சம்பவங்களை பற்றி கேட்டறிந்தார். இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் ராணுவ வீரர் நீலமேகம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேற்று காலை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு அவர் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரை சந்தித்து, சங்கிலி பறித்த நபரை விரைந்து கைது செய்ய கோரி மனு அளித்தார். இது குறித்து நீலமேகம் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ராணுவத்தில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தேன். எனது மனைவியிடம் சங்கிலி பறித்த வழக்கில் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. வீடு புகுந்து சங்கிலி பறித்த நபரால் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம். இதனால் ஊரில் இருக்கவே பயமாக இருக்கிறது. ஆகவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.


Next Story