காந்திபுரம் சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் செல்ல ஏற்பாடு

காந்திபுரம் சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காந்திபுரம் சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சிக்னல் இல்லா போக்குவரத்து
கோவை மாநகரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கோவையில் வாகன பெருக்கத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சாலை விரிவாக்கம், மேம்பாலம் போன்ற பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. ஆனாலும் சந்திப்பு ரோடுகளில் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் ெகாள்ளாமல் இருக்க சிக்னல்கள் அமைக்கப் பட்டு உள்ளன. அதை பின்பற்றி வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
ஆனால் சிக்னல் பகுதியில் அடிக்கடி வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். அதை தவிர்க்க சிக்னல் இல்லா போக்குவரத்து நடைமுறையை போலீசார் அமல்படுத்தி வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் வரவேற்பு
அதன்படி கோவை- அவினாசி ரோடு லட்சுமி மில் சிக்னல், எல்.ஐ.சி. சிக்னல், உப்பிலிபாளையம் சிக்னல், சிங்காநல்லூர் சிக்னல் உள்ளிட்ட இடங்களில் சிக்னல் இல்லா போக்குவரத்து அமல்படுத்தப்பட்டது.
இதன் மூலம் அந்த பகுதிகளில் வாகனங்கள் நிற்காமல் தொடர்ந்து செல்லும் வகையில் இரும்புத்தடுப்புகள் வைக்கப் பட்டு உள்ளன. இந்த ஏற்பாடு வாகன ஓட்டிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
போக்குவரத்தில் மாற்றம்
இது போல் கோவை காந்திபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சிக்னல் இல்லா போக்குவரத்து நேற்று அமல்படுத்தப்பட்டது. இதற்காக வாகனங்கள் நிற்காமல் சீராக செல்லும் வகையில் சாலையில் இரும்புத்தடுப்புகள் வைக்கப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, வி.கே.கே. மேனன் ரோட்டில் இருந்து கிராஸ்கட் ரோடு, கணபதி சரவணம்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் காந்திபுரம் சிக்னலில் இருந்து இடது பக்கம் திரும்ப வேண்டும். பின்னர் பஸ் நிலையம் எதிரே வலதுபுறம் திரும்பி அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
இரும்புத்தடுப்புகள்
இதேபோல் கணபதி, சரவணம்பட்டியில் இருந்து வரும் வாகனங்கள் சிக்னலில் இருந்து வலது புறம் திரும்பி கிராஸ்கட் சாலைக்கு செல்வது தடை செய்யப்பட்டு இருந்தது.
இந்த வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் பஸ் நிலையம் வந்து அங்கிருந்து வலது புறம் திரும்பி கிராஸ்கட் ரோடு செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து காந்திபுரம் சிக்னலில் ஒரு பகுதி மூடப்பட்டு இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது.
வாகன ஓட்டிகள் அவதி
இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக பெரும்பாலான வாகனங்கள் காந்திபுரம் பஸ் நிலையம் அருகே வந்து வலது புறம் திரும்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் திரும்பும் போது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்..
இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, காந்திபுரம் சிக்னலில் வாகனங்கள் காத்து நின்று செல்வதை தவிர்க்கும் வகையில் சோதனை முயற்சியாக இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதில் தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யப்படும் என்றனர்.






